தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் 9 பேர் பலி: இறந்தவர்களின் குடும்பத்துக்கு கவர்னர் இரங்கல்
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியானதை தொடர்ந்து ஊட்டியில் கலைநிகழ்ச்சியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரத்து செய்தார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.
ஊட்டி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை யிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நிறைவு விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று கலந்து கொண்டார்.
விழாவின் போது, ஆதிவாசி மக்களின் பாரம்பரிய நடனங்களை காண்பதற்காக மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தார்.
அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் துப்பாக்கி சூடு தொடர்பாக அரசு உங்களுக்கு என்ன தகவல் கொடுத்து இருக்கிறது? அது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று கேள்வியை எழுப்பினர். அதற்கு பன்வாரிலால் புரோகித் கையை உயர்த்தி வணக்கம் தெரிவித்து விட்டு, கோப்பை மற்றும் பரிசுகளை வழங்குவதற்காக மேடைக்கு சென்றார்.
அதனை தொடர்ந்து நிறைவு விழா முடிந்து கவர்னர் புறப்படும் போது, அவர் வரும் வழியில் பத்திரிகையாளர்கள் மீண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 9 பேர் இறந்து உள்ளனர். இதுகுறித்து அரசிடம் என்ன விளக்கம் கேட்டு இருக் கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதில் எதுவும் கூறாமல், காரில் ஏறி ராஜ்பவனுக்கு சென்று விட்டார். இதையடுத்து ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தென்னக பண்பாட்டு மையம் சார்பில், கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய கதக் கலைநிகழ்ச்சி தொடங்க இருந்தது. முன்னதாக அரங்கிற்கு கவர்னரின் குடும்பத்தினர் வந்து இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர்.
இந்த நிலையில் கலைநிகழ்ச்சியை தொடங்கி வைக்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஊட்டி ராஜ்பவனில் இருந்து கார் மூலம் பழங்குடியினர் பண்பாட்டு மைய நுழைவுவாயில் பகுதிக்கு வந்து விட்டு, காரை விட்டு இறங்காமல் மீண்டும் ராஜ்பவனுக்கு சென்றார். அவரது குடும்பத்தினரை அதிகாரிகள் அழைத்து சென்றனர். இது குறித்து மேடையில் இருந்த கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் துயர சம்பவம் நடந்து உள்ளதால் தென்னக பண்பாட்டு மைய தலைவராக உள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலைை- நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டார். இன்று இந்த நிகழ்ச்சி நடைபெறாது என்று அறிவித்தார். இதையொட்டி பண்பாட்டு மையத்துக்கு வந்திருந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியான செய்தியை அறிந்து எனது மனம் கவலையில் நிறைந்து உள்ளது. இதில் பலியானவர்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழகத்தில் அமைதி நிலவ, பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story