ஜனதா தளம்(எஸ்)–காங்கிரஸ் கூட்டணி அரசு 5 ஆண்டுகளை பூர்த்தி செய்வது கடினம் டி.கே.சிவக்குமார் பேட்டியால் புதிய சர்ச்சை
கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்)–காங்கிரஸ் கூட்டணி அரசு, 5 ஆண்டுகளை முழுமையாக பூர்த்தி செய்வது கடினமானது என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்)–காங்கிரஸ் கூட்டணி அரசு, 5 ஆண்டுகளை முழுமையாக பூர்த்தி செய்வது கடினமானது என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
ஆட்சேபனை இல்லைஜனதா தளம்(எஸ்)–காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. துணை முதல்–மந்திரி பதவிக்கு வர தனது ஆட்சேபனை இல்லை என்று தேவேகவுடா கூறி இருக்கிறார். இதை நான் ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டேன். இதுகுறித்த விஷயத்தில் முடிவு எடுப்பதை காங்கிரஸ் மற்றும் குமாரசாமிக்கு அவர் விட்டுள்ளார்.
மந்திரி பதவி பங்கீடு மற்றும் துணை முதல்–மந்திரி பதவி குறித்து எங்கள் கட்சியின் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், குமாரசாமியுடன் அமர்ந்து ஆலோசித்து முடிவு எடுப்பார். எனக்கு எந்த பதவியை எங்கள் கட்சி மேலிடம் வழங்கும் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. கட்சி மேலிடம் முடிவு எடுக்கும் வரை நான் அமைதியாக இருப்பேன்.
கடினமான விஷயம்நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் எதிராக ஓட்டுப்போட மாட்டார்கள். முடிந்தவரை விரைவாக இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை முடித்துவிட்டு, தங்களின் சொந்த தொகுதிக்கு செல்ல எம்.எல்.ஏ.க்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த கூட்டணி அரசு 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்வது என்பது கடினமான விஷயம்.
ஆனால் மதசார்பற்ற கொள்கை அடிப்படையில் அவ்வப்போது எழும் பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வோம். நானும், குமாரசாமியும் சுமூகமாக பணியாற்றாவிட்டால், அரசை சரியாக நடத்துவது கடினமாகிவிடும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
டி.கே.சிவக்குமார் தனது பேட்டியின்போது காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி, முழுமையாக 5 ஆண்டுகளை பூர்த்தி செய்வது கடினம் என்று குறிப்பிட்டதால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தலையிட விரும்பவில்லைஜனதா தளம்(எஸ்) மூத்த தலைவர் பசவராஜ் ஹொரட்டி கூறுகையில், “துணை முதல்–மந்திரி பதவியை ஒருவருக்கு வழங்குவதா? அல்லது 2 பேருக்கு வழங்குவதா? என்பது குறித்து காங்கிரஸ் முடிவு செய்யும். இதில் எங்கள் கட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த விஷயத்தில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. எங்கள் கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவே இதை எதிர்க்கவில்லை. இதுபற்றி அவர் தனது கருத்தை தெளிவுபடுத்தி இருக்கிறார். ஆட்சி அதிகாரம் கையை விட்டு போய்விட்டதால், பா.ஜனதாவினர் எங்கள் கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க முயற்சி செய்கிறார்கள். அவர்களின் முயற்சி வெற்றி பெறாது“ என்றார்.