அரசு மானியத்துடன் சிறிய பால்பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


அரசு மானியத்துடன் சிறிய பால்பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 23 May 2018 4:15 AM IST (Updated: 23 May 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் அரசு மானியத்துடன் சிறிய பால்பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் விஜயலட்சுமி தகவல்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டிற்கு கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 6 கறவை மாடுகள் கொண்ட சிறிய பால் பண்ணை 3 அலகுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ.5 லட்சம் ஆகும். அதில் 25 சதவீதம் அரசு மானியமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பயனாளிகள் கீழ்க்காணும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். அதன் விவரம் வருமாறு:-

கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயனாளியாக இருத்தல் கூடாது. தீவனப்புல் வளர்ப்பதற்கு தேவையான ஒரு ஏக்கர் பாசன நிலம் பயனாளியின் பெயரில் இருத்தல் வேண்டும். கொட்டகை அமைப்பதற்கான 300 சதுர அடி இடம் இருக்க வேண்டும். சிட்டா அடங்கல் சமர்ப்பிக்க வேண்டும். பயனாளி அல்லது பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள் மத்திய, மாநில அரசு மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் ஏதேனும் நிறுவனங்களில் பணியில் இருக்க கூடாது. உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகளாக இருக்க கூடாது. பயனாளி கிராம ஊராட்சியில் நிரந்தரமாக குடியிருப்பவராக இருத்தல் வேண்டும்.

பயனாளிகள் வங்கி கடன் மூலம் இந்த திட்டத்தினை செயல்படுத்த விரும்பினால், அருகில் உள்ள வங்கி மேலாளரை அணுகி கடன் வழங்க ஒப்புதல் கடிதத்தினை பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், விண்ணப்பதாரர் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் நகல், தொலைபேசி எண் இணைக்கப்பட வேண்டும். இம்மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 3 சிறிய பால் பண்ணையில் ஒன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பயனாளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறிய பால்பண்ணை அமைக்க விண்ணப்பதாரர்களில் 3 பயனாளிகளை தேர்வு செய்ய கலெக்டரை தலைவராக கொண்ட தேர்வுக் குழுவே இறுதி முடிவு செய்யும். மேற்காணும் தகுதியுள்ள, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு வருகிற 28-ந்தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story