பள்ளபட்டியில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 15 பேர் காயம்


பள்ளபட்டியில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 15 பேர் காயம்
x
தினத்தந்தி 23 May 2018 4:15 AM IST (Updated: 23 May 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

பள்ளபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.

மணிகண்டம்,

மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூர் ஊராட்சி பள்ளபட்டியில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்து மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் பொன்ராமர் மற்றும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து அங்கு ஜல்லிக்கட்டு நடத்த கலெக்டர் ராஜாமணி அனுமதி வழங்கினார்.

இதையடுத்து நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, லால்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, விராலிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன.

கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து 546 காளைகளுக்கு அனுமதி வழங்கினர். இதேபோல் மாடுபிடி வீரர்களை டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து தகுதியான 223 மாடுபிடி வீரர்களை ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் வளர்மதி, ராஜலட்சுமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. பின்னர் மற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் பெரும்பாலான காளைகளை வீரர்கள் அடக்கினர். சில காளைகள், பிடிக்க வந்தவர்களை முட்டி தூக்கி வீசின.

இதில் காளைகள் முட்டியதில் மதுரை மேலூரை சேர்ந்த மனோ (வயது 23), மாத்தூரை சேர்ந்த தங்கராஜ் (30), லால்குடி வெள்ளனூரைச் சேர்ந்த மகேஷ்வரன் (24), எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த பீர்முகம்மது (27), திண்டுக்கல்லை சேர்ந்த அருண் (23) உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு மைதானம் அருகே தயாராக இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசு, வெள்ளிக்காசு, சைக்கிள், கட்டில், மிக்சி, நாற்காலி, பாத்திரங்கள், ரொக்கப்பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. காலை 8.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 2 மணிக்கு முடிந்தது.

ஜல்லிக்கட்டை திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமார் எம்.பி., ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் பொன்ராமர், தாசில்தார் சண்முகம், மணிகண்டம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் முத்துக்கருப்பன், நாகமங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வளர்மதி அற்புதராஜ், நவலூர்குட்டப்பட்டு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செல்வம் மற்றும் மணிகண்டம், நாகமங்கலம், விராலிமலை, இனாம்குளத்தூர், மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் பார்வையிட்டனர்.

பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மேற்பார்வையில் திருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சேகர், மணிகண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவர் பேராசிரியர் சண்முகம், அளுந்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பழனிச்சாமி மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story