மாவட்டத்தில் தபால் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
7-வது ஊதியக்குழுவை அமல்படுத்தக்கோரி கடலூர் மாவட்டத்தில் தபால் ஊழியர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
கடலூர்
கிராமப்புற தபால் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். சங்க அங்கீகாரத்தை உடனே வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கடலூர் தலைமை தபால் நிலையத்தில் தபால் ஊழியர்கள், தபால்காரர்கள், கிராமப்புற தபால் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
இதற்கு அகில இந்திய தபால் ஊழியர் சங்க துணை தலைவர் பால்தேவசகாயம் தலைமை தாங்கினார். தபால் -4 கோட்ட செயலாளர் ரவிக்குமார், கிராமப்புற தபால் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் நம்பி, பொருளாளர் சந்தானம், ஜெயமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் நிர்வாகிகள் மனோகரன், குமாரசாமி, அப்துல்வஹாப், மாதவன், ஜோதி, பிரசாத், காளிமுத்து உள்பட தபால் ஊழியர் சங்கத்தினர், தபால்காரர்கள், கிராமப்புற தபால் ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டனர்.
இது பற்றி அகில இந்திய தபால் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் ரவிக்குமார் கூறுகையில், கிராமப்புற தபால் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, மந்தாரக்குப்பம், அண்ணாமலைநகர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, நெல்லிக்குப்பம், புவனகிரி என மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தபால் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.
ஊழியர்களின் இந்த போராட்டத்தால் தபால்பட்டுவாடா, அஞ்சல் வங்கி பணபரிமாற்றம், துரித தபால், பதிவு தபால், பார்சல் போஸ்ட் ஆகிய பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் ரூ.1½ கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே எங்களின் நியாயமான கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டம் தொடரும் என்றார்.
Related Tags :
Next Story