தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்புக்கு தீவைப்பு 40 இருசக்கர வாகனங்கள்–20 கார்கள் சேதம்


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்புக்கு தீவைப்பு 40 இருசக்கர வாகனங்கள்–20 கார்கள் சேதம்
x
தினத்தந்தி 23 May 2018 3:30 AM IST (Updated: 23 May 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்புக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதில் 40 இருசக்கர வாகனங்கள், 20 கார்கள் எரிந்து நாசமாயின.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்புக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதில் 40 இருசக்கர வாகனங்கள், 20 கார்கள் எரிந்து நாசமாயின.

குடியிருப்புக்கு தீவைப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது. போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 8 பேர் பலியானார்கள். துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு இருந்தவர்கள் அங்கு இருந்து வெளியே ஓடினார்கள்.

பின்னர் போராட்டக்காரர்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தனர். அங்கு கீழ் தளத்தில் கார் பார்க்கிங் உள்ளது. அங்கு இருந்த இருசக்கர வாகனங்கள், கார்களை அடித்து நொறுக்கினார்கள். பின்னர் அவர்கள் இருசக்கர வாகனங்கள், கார்களுக்கு தீவைத்தனர். இந்த தீ மளமளவென குடியிருப்பு முதல் தளத்திற்கு பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும் முதல் தளத்தில் உள்ள வீடுகளில் யாரும் இல்லாததால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தில் மொத்தம் 40 இருசக்கர வாகனங்கள், 20 கார்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் மீது தாக்குதல்

தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கு இருந்து வெளியேறி இந்திய உணவு கழக குடோன் பகுதி அருகில் திரண்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரை உருட்டுக்காட்டையால் தாக்கி விரட்டினார்கள். மேலும் 2 போலீசாரின் ஆடைகளை கழற்றி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் போராட்டக்காரர்கள் அந்த பகுதியில் உள்ள மாவட்ட தொழிற்மைய அலுவலகத்தை கல்வீசி தாக்கினார்கள். அலுவலகத்தில் இருந்த ஒரு கார், மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்தனர்.


Next Story