‘நிபா’ வைரஸ் பரவுவதை தடுக்க கேரள எல்லையில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு பரிசோதனை


‘நிபா’ வைரஸ் பரவுவதை தடுக்க கேரள எல்லையில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு பரிசோதனை
x
தினத்தந்தி 23 May 2018 4:00 AM IST (Updated: 23 May 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

‘நிபா‘ வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், கேரள எல்லையில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.

கம்பம்

கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் எதிரொலியாக தமிழக-கேரள எல்லையில் பீதி ஏற்பட்டுள்ளது. மேலும் ‘நிபா‘ வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக தமிழக-கேரள எல்லைப்பகுதியில் மருத்துவ குழுவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அதன்படி கேரள எல்லையில் உள்ள கம்பம்மெட்டு பகுதியில் உள்ள வணிகவரித்துறை சோதனைச்சாவடியில் தேனி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

புதுப்பட்டி சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில், செவிலியர் முத்துராஜி மற்றும் சுகாதார பணியாளர்கள் நேற்று முதல் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவில் இருந்து கம்பத்துக்கு வாகனங்களில் வருபவர்களிடம் காய்ச்சல் தொடர்பான மருத்துவ பரிசோதனை செய்கின்றனர். மேலும் வாகனங்களின் அடிப்பகுதியில் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்.

இதேபோல் கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருந்து கேரளாவுக்கு செல்கிற சுற்றுலா பயணிகள், தோட்ட தொழிலாளர்களுக்கு நிபா வைரஸ் குறித்து மருத்துவ குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் தமிழக-கேரள எல்லையான லோயர்கேம்ப் பஸ்நிலையம் பகுதியில், தேனி மருத்துவக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் இருந்து லோயர்கேம்ப் நோக்கி வாகனங்களின் செல்வோருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பணியில் கூடலூர் சுகாதார களமேற்பார்வையாளர் கண்ணன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாகனங்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.

இதுகுறித்து அரசு சித்த மருத்துவர் சிராஜூதீன் கூறுகையில், மலேசியாவின் நிபா என்ற கிராமத்தில் முதன் முதலாக இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டதால் இதற்கு ‘நிபா‘ வைரஸ் என்று பெயரிடப்பட்டது. வவ்வால்களின் சிறுநீர், மலம், உமிழ் நீர், விந்தணு ஆகியவை மூலம் ‘நிபா‘ வைரஸ் பரவுகிறது. வவ்வால்களிடம் இருந்து வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கும், அதன் மூலம் மனிதர்களுக்கும் பரவும். ‘நிபா‘ வைரஸ் கிருமியானது மனிதர்களுக்கு மூளைக்காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, மயக்கம், குழப்பமான மனநிலை, கோமோ ஏற்பட்டு மரணம் ஏற்படும் என்றார்.

Next Story