பராமரிப்பு பணி நிறைவு: கோனேரிப்பட்டி தடுப்பணையில் மீண்டும் மின் உற்பத்தி


பராமரிப்பு பணி நிறைவு: கோனேரிப்பட்டி தடுப்பணையில் மீண்டும் மின் உற்பத்தி
x
தினத்தந்தி 22 May 2018 10:30 PM GMT (Updated: 22 May 2018 9:24 PM GMT)

தேவூர் அருகே கோனேரிப்பட்டி தடுப்பணை பகுதியில் பராமரிப்பு பணி நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

தேவூர்,

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் காவிரி ஆற்றில் பாய்ந்தோடுகிறது. காவிரி ஆற்றில் செக்கானூர் நீர்மின் தேக்க நிலையம், நெரிஞ்சிப்பேட்டை நீர்மின் தேக்க நிலையம், கோனேரிப்பட்டி நீர்மின் தேக்க நிலையம், ஊராட்சிக்கோட்டை நீர்மின்தேக்க நியலம் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் மூலம் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த தடுப்பணைகளில் ஆண்டுக்கு ஒருமுறை கோடை காலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தேவூர் அருகே உள்ள கோனேரிப்பட்டி தடுப்பணை பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் தொடங்கியது. மேலும் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.

மீண்டும் உற்பத்தி

தடுப்பணையின் மதகுகள் சீரமைத்தல், வர்ணம் பூசுதல் உள்பட பல்வேறு பணிகள் நடந்தன. இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து கோனேரிப்பட்டி தடுப்பணையின் அனைத்து மதகுகளும் அடைக்கப்பட்டு, தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை கொண்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் கோனேரிப்பட்டி தடுப்பணையில் பராமரிப்பு பணி முடிவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது தினமும் 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்றனர். 

Next Story