தூத்துக்குடியில் நடந்த கலவரத்துக்கு முதல்–அமைச்சர் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் பாலகிருஷ்ணன் பேட்டி
தூத்துக்குடியில் நடந்த கலவரத்துக்கு முதல்–அமைச்சர் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நடந்த கலவரத்துக்கு முதல்–அமைச்சர் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தூத்துக்குடியில் நேற்று இரவு நிருபர்களிடம் கூறியதாவது:–
பதவி ராஜினாமாமக்களையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கின்ற ஸ்டெர்லைட் ஆலையை மக்கள் மூட சொல்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. அரசு அந்த ஆலையை பாதுகாக்க செயல்படுகிறது. கடைசியாக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த பொதுமக்களை கலெக்டர் சந்திக்காமல், எந்த அரசு அதிகாரிகளும் சந்திக்காமல் தமிழக அரசு திட்டமிட்டு காவல்துறை மூலம் மக்களை தாக்கி உள்ளனர். இதில் 100–க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.
இதில் 9 பேர் உயிர் இழந்து விட்டதாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். அதே நேரத்தில் 11 பேர் இறந்து விட்டதாக கவர்னர் தெரிவிக்கிறார். இதில் கூட அரசு நேர்மையாக இல்லை. தூத்துக்குடியில் நடந்த இந்த கலவரத்துக்கு முதல்–அமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே அவர் தனது முதல்–அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
கடையடைப்புஇந்த பிரச்சினையை இவ்வளவு மோசமாக அணுகிய மாவட்ட கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கலவரத்தின்போது பணியில் இருந்த போலீசார் மீது நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்திட எதிர்க்கட்சியினர் அனைவரும் முன்வர வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.