போலீஸ் துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் 3 இடங்களில் அரசு பஸ்கள் மீது கல்வீச்சு


போலீஸ் துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் 3 இடங்களில் அரசு பஸ்கள் மீது கல்வீச்சு
x
தினத்தந்தி 23 May 2018 3:07 AM IST (Updated: 23 May 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் துப்பாக்கிசூடு சம்பவத்தை கண்டித்து 3 இடங்களில் அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டன.

கயத்தாறு, 

போலீஸ் துப்பாக்கிசூடு சம்பவத்தை கண்டித்து 3 இடங்களில் அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டன.

கயத்தாறு

நெல்லையில் இருந்து கோவில்பட்டிக்கு நேற்று மாலையில் அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை கடம்பூரைச் சேர்ந்த முத்துராஜ் (வயது 46) ஓட்டி சென்றார். கோவில்பட்டியைச் சேர்ந்த கந்தன் (57) பஸ்சில் கண்டக்டராக இருந்தார். பஸ்சில் 59 பயணிகள் இருந்தனர்.

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் அருகில் கழுகுமலை ரோடு விலக்கு பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென்று பஸ்சை வழிமறித்தனர். பின்னர் அவர்கள், ‘தமிழக அரசு ஒழிக’ என்று கோஷம் எழுப்பியவாறு, பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது சரமாரியாக கல்வீசி தாக்கினர்.

2 பேருக்கு வலைவீச்சு

இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி விழுந்தது. பஸ்சின் கண்ணாடி சிதறல்கள் தெறித்து விழுந்ததில், டிரைவர் முத்துராஜின் கையில் லேசான ரத்த காயம் ஏற்பட்டது. பின்னர் 2 மர்மநபர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். காயம் அடைந்த முத்துராஜ் கயத்தாறு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் வழக்குப்பதிவு செய்து, பஸ் மீது கல்வீசி தாக்கிய 2 மர்மநபர்களையும் தேடி வருகிறார்.

பெரியதாழை

இதேபோன்று திருச்செந்தூரில் இருந்து குட்டத்துக்கு நேற்று மாலையில் அரசு டவுன் பஸ் (தடம் எண்: 9) புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் சுமார் 15 பயணிகள் இருந்தனர். அந்த பஸ் தட்டார்மடம் அருகே பெரியதாழைக்கு வந்ததும், அந்த பஸ்சை சிலர் வழிமறித்து, பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டரை கீழே இறக்கி விட்டனர். பின்னர் அந்த பஸ்சின் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள கண்ணாடிகளில் சரமாரியாக கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன.

பின்னர் அந்த பஸ்சை சிறைபிடித்து, அங்குள்ள கிறிஸ்தவ ஆலயம் முன்பு நிறுத்தினர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் கிறிஸ்தவ ஆலயத்தில் மணி அடித்து, பொதுமக்கள் திரண்டு, ஊர் கூட்டம் நடத்தினர். பின்னர் அந்த பஸ்சை சுமார் 2 மணி நேரம் கழித்து விடுவித்தனர். தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தியதை கண்டித்து, மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

கூத்தங்குழி

நெல்லை மாவட்டம் கூத்தங்குழியில் கிறிஸ்தவ ஆலயம் முன்பு பொதுமக்கள் திரண்டனர். அங்கு தூத்துக்குடியில் துப்பாக்கிசூடு நடத்திய போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கூடங்குளத்துக்கு சென்ற 2 அரசு பஸ்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர். அதில் ஒரு பஸ்சை பொதுமக்கள் கல்வீசியும், அடித்தும் நொறுக்கினர். சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி அந்த பஸ்களை மீட்டனர்.

Next Story