திண்டுக்கல்லில் மருத்துவமனை 4-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வாலிபர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி சோமலிங்கபுரத்தை சேர்ந்த ஆண்டவர் மகன் முருகானந்தம் (வயது 33). இவருடைய மனைவி அமுதபிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகானந்தத்துக்கு உடல்நலம் பாதிக் கப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அந்த மருத்துவமனையில் 2-வது மாடியில் உள்ள அறையில் முருகானந்தம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு உதவியாக அவருடைய மனைவி உடன் இருந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் அமுத பிரியா, சாப்பாடு வாங்க வெளியே சென்றார். பின்னர் திரும்பி வரும் போது, முருகானந்தம் அறையை விட்டு வேகமாக வெளியே செல்வதை பார்த்தார்.
இதையடுத்து அமுதபிரியா, கணவரை பின்தொடர்ந்து சென்றார். ஒரு கட்டத்தில் மருத்துவமனையின் 4-வது மாடியை நோக்கி ஓடினார். பின்தொடர்ந்து சென்ற அமுதபிரியா, அவரை தடுத்து நிறுத்த முயன்றார். அதற்குள் முருகானந்தம், மருத்துவமனை 4-வது மாடியில் இருந்து அருகில் இருந்த வீட்டின் மீது குதித்தார். தனது கண் முன்னே கணவர் மாடியில் இருந்து குதிப்பதை பார்த்த அமுதபிரியா கதறி அழுதார்.
உடனே மருத்துவமனை ஊழியர்கள் அங்கு வந்தனர். ஆனால், பலத்த காயம் அடைந்த முருகானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் விசாரணை நடத்தினர். உடல்நல பாதிப்பால் மனஅழுத்தம் ஏற்பட்டு அதனால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story