ஓட்டப்பிடாரம் அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கி ஊர்க்காவல்படை வீரர் சாவு


ஓட்டப்பிடாரம் அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கி ஊர்க்காவல்படை வீரர் சாவு
x
தினத்தந்தி 23 May 2018 3:30 AM IST (Updated: 23 May 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கி ஊர்க்காவல்படை வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே கல்குவாரி தண்ணீரில் மூழ்கி ஊர்க்காவல்படை வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஊர்க்காவல்படை வீரர்

தூத்துக்குடி டி.சவேரியர்புரத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மகன் முருகன் (வயது 25). இவர் தூத்துக்குடியில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வந்தார். இவர் தன்னுடைய நண்பரின் திருமணத்துக்காக ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வெங்கடாசலபுரத்துக்கு நேற்று முன்தினம் காலையில் சென்றார்.

பின்னர் அவர், அங்கு திருமணத்துக்கு வந்த நண்பர்கள் மேலும் 4 பேருடன் சேர்ந்து ஓட்டப்பிடாரம் குறுக்குச்சாலை அருகே உள்ள ஒரு கல்குவாரி தண்ணீரில் குளிக்க சென்றார்.

நீரில் மூழ்கினார்

நண்பர்கள் 5 பேரும் அந்த கல்குவாரி தண்ணீரில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது முருகன் மட்டும் திடீரென தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது. உடனே அதிர்ச்சி அடைந்த மற்ற 4 பேரும் முருகனை தண்ணீரில் தேடினர். ஆனால் அவர்களால் முருகனை மீட்க முடியாததால், உடனடியாக ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன் மற்றும் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, முருகனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களாலும் முருகனை மீட்க முடியவில்லை.

உடல் மீட்பு

இதையடுத்து தூத்துக்குடியில் இருந்து முத்துகுளிக்கும் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி, உயிர் பிரிந்த நிலையில் முருகனின் உடலை நேற்று முன்தினம் இரவு கல்குவாரியில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரி தண்ணீரில் மூழ்கி ஊர்க்காவல்படை வீரர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story