திருப்பூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க வேண்டும்: கலெக்டரிடம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மனு


திருப்பூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க வேண்டும்: கலெக்டரிடம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மனு
x
தினத்தந்தி 23 May 2018 4:00 AM IST (Updated: 23 May 2018 3:47 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மனு கொடுத்தனர்.

திருப்பூர், 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொருளாளர் பாலு தலைமையில், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், தம்பி வெங்கடாசலம், லோகநாதன், ரகுபதி உள்பட பலர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் சாய மற்றும் தோல் தொழிற்சாலை கழிவுகள், நகராட்சியின் கழிவுகள் ஆகியவை நீர்நிலைகளிலும், நிலத்திலும் கலக்கப்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் இந்த பிரச்சினை தீர்ந்தபாடில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகமும், அதிகாரிகளும் இருந்த போதும் இதனை தடுப்பதற்கான நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை.

மேலும், இந்த தண்ணீரை குடிப்பதால் வயது வித்தியாசமில்லாமல் புற்றுநோய் மற்றும் தோல் நோய்கள் வருகிறது. ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டு குழந்தைகள் பிறக்காமல் இருப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

மேலும், அனைத்து தொழிற்சாலைகளும், நகராட்சிகளும், கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் பயன்படுத்தாமல் தாமதப்படுத்தினால், திருப்பூர் மாவட்டம் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாகி விடும். முழுமையாக கழிவுநீரை சுத்திகரிக்காத தொழிற்சாலைகளை இயங்கவிடாமல், அரசு அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க வேண்டும். தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதுபோல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட பரமசிவம்பாளையம், புதுத்திருப்பூர், பூத்தார்நகர் ஆகிய பகுதிகளில் பல மாதங்களாக பல்வேறு பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

மேலும், இந்த பகுதிகளில் சாக்கடைகளிலும் கழிவுநீர் தேங்கி வெளியே செல்லாமல் நிற்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். இல்லையென்றால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

Next Story