உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது


உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது
x
தினத்தந்தி 23 May 2018 4:15 AM IST (Updated: 23 May 2018 3:47 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

தளி,

உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், புனுகுபூனை, கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, மலைப்பாம்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடைகாலம் மற்றும் குளிர்காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நேற்றுமுதல் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் கோடைகால கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளது. இந்த பணிகள் வருகின்ற 28-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

அப்போது உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் மொத்தமுள்ள 21 பீட்டுகளிலும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு பீட்டுக்கும் தலா 2 குழுக்கள் வீதம் மொத்தம் 126 பேர் 42 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் உள்ள வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர், வேட்டைதடுப்பு காவலர், தன்னார்வலர் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் செல்போன் செயலி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் இப்பணியினை மேற்கொண்டு வருகிறார்கள். அப்போது முதல் 3 நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை ஒரு நாளுக்கு 5 கிலோமீட்டர் வீதம் 3 நாட்களில் 15 கிலோமீட்டர் தூரம் சென்று அங்கு காணப்படும் மாமிசம் சாப்பிடும் விலங்குகளின் தடயங்கள் பதிவுசெய்யப்படும்.

அடுத்த 3 நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணிக்குள் நேர்கோட்டு பாதையில் சென்று புலிகள் மற்றும் வனவிலங்குகளின் காலடி குளம்பினங்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறும். அப்போது நேர்கோட்டு பாதையில் தென்படும் பறவையினங்கள், வனவிலங்குகள் நடமாட்டம் ஆகியவை குறித்து பதிவுசெய்யப்படும். மேலும் யானைலத்தி, காட்டெருமை சாணம், புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றி, நீலகிரி மந்தி, சிங்கவால் குரங்கு ஆகியவற்றின் புழுக்கை மற்றும் சாணங்கள் குறித்தும் கணக்கெடுப்பு நடைபெறும். இறுதி நாளில் கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதன் பின்பாக வனவிலங்குகள் கணக்கெடுப்பு குறித்த இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்த பணிகளை திருப்பூர் மாவட்ட வனஅலுவலர் தொடங்கிவைத்தார். அப்போது உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டைதடுப்பு காவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் உடனிருந்தனர்.

Next Story