நான்கு வழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு
நான்கு வழிச்சாலைஅமைக்க நிலங்களை கையகப்படுத்துவது குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
மதுரை
வாடிப்பட்டியில் இருந்து தாதம்பட்டி, கொண்டயம்பட்டி சின்னஇலந்தைகுளம், கல்லணை, பனைகுடி வழியாக தாமரைபட்டிவரை சுமார் 33 கிலோமீட்டர் தூரத்துக்கு புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து கருத்து கேட்பு கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி குணாளன் தலைமை தாங்கினார். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், நான்குவழிச் சாலைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதியில் பெரியாறு பாசன விவசாய நிலங்கள் உள்ளன. இந்த பகுதியில் 700 ஏக்கர் விளை நிலங்கள், நூற்றுக்கணக்கான பாசன கிணறுகள் அழிக்கப்படும். அதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்தார்கள். விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை விட்டு விட்டு வேறு மாற்றுப்பாதையை தேர்வு செய்யவேண்டும் என்றார்கள். அதன்காரணமாக கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதைதொடர்ந்து விவசாயிகள் பலர் வெளிநடப்பு செய்தனர்.
Related Tags :
Next Story