தூங்கிய பெண்ணின் கழுத்தில் கிடந்த 11 பவுன் நகை பறிப்பு
உசிலம்பட்டி அருகே தூங்கிய பெண்ணின் கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே உள்ளது அன்னம்பாரிபட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் மொக்கராசுத்தேவர் மனைவி தனலட்சுமி (வயது 45). நேற்று முன்தினம் இரவு கதவை பூட்டிவிட்டு தனலட்சுமி வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு யாரோ மர்ம நபர் வீட்டு மாடியின் வழியாக ஏறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அங்கு துாங்கிக்கொண்டிருந்த தனலட்சுமியின் கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்கச்சங்கிலியை நைசாக பறித்துக்கொண்டு தப்பிச் செல்வதற்காக வீட்டின் கதவைத் திறந்து வெளியே சென்றுள்ளார். அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டு தனலட்சுமி விழித்துப் பார்த்தார். அப்போது யாரோ அன்னியர் ஒருவர் வீட்டிற்குள் இருந்து வெளியே செல்வது தெரிந்ததும் சத்தம் போட்டுள்ளார்.
சத்தத்தை கேட்டதும் மர்ம நபர் வேகமாக வெளியேறி இருட்டில் சென்று மறைந்தார். பெண்ணின் சத்தத்தை கேட்டு விழித்துக்கொண்ட அக்கம்பக்கத்தினர் வந்து விவரமறிந்து மர்ம நபர்களை தேடி சென்றனர். ஆனால் அவர் தப்பியோடி விட்டதால், வெகுநேரமாக தேடிவிட்டு திரும்பி வந்தனர். இதுகுறித்து தனலட்சுமி உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகையை லாவகமாக பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story