ரெயில்வே ஊழியரின் மனைவி, கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை


ரெயில்வே ஊழியரின் மனைவி, கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 23 May 2018 5:00 AM IST (Updated: 23 May 2018 4:50 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் அருகே ரெயில்வே ஊழியரின் மனைவி 6 மாத கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்தவர் சண்முகத்தாய். இவருக்கும் நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த குமார் என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குமார் ரெயில்வேத் துறையில் பழுது நீக்கும் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சுபிதா என்ற 6 மாத பெண் குழந்தை இருந்தது.

குமாருக்கும் சண்முகத்தாய்க்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த வாரமும் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு கைக்குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.

இந்த நிலையில் சண்முகத்தாயின் பெற்றோர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய போது தனது மகள் மற்றும் பேத்தி இருவரும் காணாமல் போனது குறித்து பல இடங்களில் தேடி உள்ளனர். இதனிடையே தெற்கூர் என்ற இடத்தில் விவசாய கிணற்றில் தாய் மற்றும் மகள் இருவரும் சடலமாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கைக்குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து இருவரின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story