அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஊரக தகவலியல் மையம் துணை வேந்தர் சுப்பையா தகவல்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிதாக ஊரக தகவலியல் மையம் தொடங்கப்பட உள்ளது என்று துணை வேந்தர் சுப்பையா கூறினார்.
காரைக்குடி
உயிரியல், எரிசக்தியியல், உணர்விகள், உயிரியல் சார் தகவலியல், சமூகவியல், கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் ஆகிய பல துறைகளில் அழகப்பா பல்கலைக்கழகம் முன்னேறி இந்திய அளவில் உயர்மட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போது புவி அறிவியல், செயற்கைகோள் சார் தொலை உணர்வு மற்றும் கணினி சார் புவி தகவலியல் ஆகியவற்றிலும் முன்னேற தொடங்கியுள்ளது. இந்தநிலையில் அழகப்பா பல்கலைக்கழகம் மிக பரந்து விரிந்த கிராமப்புறம் சார்ந்த பகுதியில் அமைந்து இருப்பதால், இப்பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி திறன் வலிமையை கருத்தில் கொண்டு அழகப்பா பல்கலைக்கழகம் இப்பகுதியின் ஊரக வளர்ச்சிக்கு திட்டமிடுதலில் பெரும் பங்கு ஆற்ற திட்டமிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழகத்தில் புதிதாக ஊரக தகவலியல் மையம் தொடங்கப்பட உள்ளது. இந்த மையம் ஊரகம் சார் இயற்கை வளங்கள், இயற்கை பேரிடர், கல்வி, மருத்துவம், வேளாண்மை, போக்குவரத்து, மின் மற்றும் எரிசக்தி போன்றவற்றில் கிராமங்களின் நிலை மற்றும் மனிதவளம் சார்ந்த விவரங்களை செயற்கை கோள் சார் புகைப்படங்கள், நேரிடையான அளவீடு, தகவல் சேகரிப்பு ஆகியவை மூலம் தகவல்களை சேகரித்து, அவற்றை கணினி மூலம் வரைபடங்களாக தயார் செய்து, இவை பற்றிய தகவல் அனைத்தையும் ஊரக தகவலியலாக உருவாக்க உள்ளது.
மேலும் இத்தகவலியல் மூலம் வளர்ச்சி திட்டங்கள் தீட்டுவதற்கோ அல்லது ஊரக நிர்மாணத்திற்காகவோ அல்லது ஆராய்ச்சிக்காகவோ அனைத்து தகவல்களையும் கணினி மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். இத்துடன் ஊரக தகவலியலில் இருந்து ஊரக இயற்கை வளம், துறைகள் சார் வளர்ச்சி திட்டங்களின் தேவை மற்றும் மனித வளம் சார் பிரச்சினைகளுக்கான ஆய்வுகளை நடத்தி அதன் முடிவுகளை பெறலாம்.
இந்த ஊரக தகவலியல் மையம் ஊரக வளர்ச்சிக்காக எல்லா தகவல்களையும் கிராமம், ஒன்றியம், வட்டம் மற்றும் மாவட்ட வாரியாக வரைபடமாகவோ, புள்ளி விவரமாகவோ மற்றும் அட்டவணை பட்டியலாகவோ கணினியில் இருந்து உடனடியாக பெறலாம்.
இதன் முதற்கட்டமாக சிவகங்கையை மாதிரி மாவட்டமாக எடுத்துக்கொண்டு மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரித்து ஊரக தகவலியல் சிவகங்கை என்ற திட்டத்தை இந்த மையம் செயலாக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story