தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 May 2018 4:00 AM IST (Updated: 23 May 2018 11:23 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தேனி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்-சாலை மறியல் நடந்தது. இதுதொடர்பாக 211 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் தேனி மாவட்டத்தில் நாம் தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சியினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி எஸ்.பி.ஐ. திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்காக மண்டல ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் அங்கு வந்த நிலையில், ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 29 பேரை போலீசார் கைது செய்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேனி, கோம்பை, கூடலூரில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. தேனி நேரு சிலை சிக்னல் அருகில் மறியல் செய்த மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர். கூடலூரில் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராஜ் உள்பட 14 பேரும், கோம்பையில் ஒன்றிய செயலாளர் வேலவன் உள்பட 23 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் சின்னமனூர், ஆண்டிப்பட்டி, போடி நகர், தென்கரை, கடமலைக்குண்டு ஆகிய இடங்களில் மறியல் செய்ய முயன்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சின்னமனூரில் 19 பேரும், ஆண்டிப்பட்டியில் 19 பேரும், போடியில் 33 பேரும், தென்கரையில் 16 பேரும், கூடலூரில் 15 பேரும், கடமலைக்குண்டுவில் 12 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்ப்புலிகள் கட்சியினர் தேனி நேரு சிலை சிக்னல் அருகில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடத்திய மாவட்ட செயலாளர் வைரமுத்து உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்டம் முழுவதும், ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டதாக மொத்தம் 211 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

அதேபோல், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தேனி பங்களாமேட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பெத்தாட்சி ஆசாத் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்மாநில பெண்கள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவி அருண்மொழி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆண்டிப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போடி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நடந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. கிளை செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். சின்னமனூர் மார்க்கையன்கோட்டை சந்திப்பில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தமிழ்பெருமாள் தலைமை தாங்கினார். கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு மாவட்டம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

Next Story