கொடைக்கானலில் கோடைவிழாவையொட்டி நாய்கள் கண்காட்சி
கொடைக்கானலில், கோடைவிழாவையொட்டி நாய்கள் கண்காட்சி நடந்தது.
கொடைக்கானல்
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடைவிழா, கடந்த 19-ந்தேதி மலர்க்கண்காட்சியுடன் தொடங்கியது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கோடைவிழாவையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி 5-வது நாளான நேற்று, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடந்தது. இந்த கண்காட்சியில் ஜெயின் பெர்ணார்டு, ஜெர்மன் செப்பர்டு, பிக்புல், ராட்வீலர், பிகீல்ஸ், பொமேரியன், சைபீரியன், பிட்ஸ், டாபர் மேன், லேப்டரார், பக் உட்பட பல்வேறு ரகங்களை சேர்ந்த 54 நாய்கள் பங்கேற்றன.
நாய்களின் குணாதிசயங்கள், கீழ்ப்படிதல், பராமரிப்பு போன்ற அம்சங்களின் கீழ் 7 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும், சிறந்த 3 நாய்கள் தேர்வு செய்யப்பட்டன. இதேபோல் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, சென்னையை சேர்ந்த தோம்னிக் என்பவரின் ஜெயின் பெர்ணார்டு ரக நாய் தட்டி சென்றது.
இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கால்நடை உதவி இயக்குனர் ஹக்கீம் தலைமை தாங்கினார். விழாவில் மன்னவனூரில் உள்ள மத்திய உரோம ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி ராஜேந்திரன், சுற்றுலா அலுவலர் உமாதேவி, தாசில்தார் பாஸ்யம் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
முன்னதாக கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் சத்தியநாராயணா வரவேற்றார். விழாவில் கால்நடை டாக்டர்கள் சங்கர விநாயகம், அருண், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் கொடைக்கானல் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நாய்கள் இடம்பெற்றிருந்தன. நாய்கள் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
Related Tags :
Next Story