குன்றத்தூர் அருகே கார் கவிழ்ந்து ஒருவர் பலி
குன்றத்தூர் அருகே கார் கவிழ்ந்து ஒருவர் பலியானார். 2 பேர் காயம் அடைந்தனர்.
பூந்தமல்லி
குன்றத்தூர், மணஞ்சேரியை சேர்ந்தவர் ரூபன் (வயது 35), வடபழனியில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் கார் டிரைவராக வேலை செய்து வருபவர் அருண் ராம்குமார் (33), நேற்று முன்தினம் நிறுவனம் சம்பந்தமாக கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு இரவு ரூபன், அருண் ராம்குமார் இருவரும் வீட்டுக்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.
அருண்ராம்குமாரின் நண்பர் விஷ்ணுவர்த்தன் (25), வேலை விஷயமாக உடுமலையில் இருந்து தாம்பரம் வந்திருந்தார். வரும் வழியில் அவரையும் காரில் ஏற்றிக்கொண்டு 3 பேரும் குன்றத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அருண் ராம்குமார் காரை ஓட்டினார். பின்னால் இருவரும் அமர்ந்திருந்தனர். வண்டலூர்- மீஞ்சூர் வெளி வட்ட சாலை, குன்றத்தூர் அருகே வந்தபோது அருண் ராம்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதை பார்த்ததும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கவிழ்ந்து நொறுங்கி கிடந்த காரில் இருந்தவர்களை மீட்டனர். இதில் விஷ்ணுவர்த்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பலத்த காயம் அடைந்த அருண் ராம்குமார், ரூபன் இருவரும் தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story