அரசு இசைப்பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை கலெக்டர் எஸ்.பிரபாகர் தகவல்


அரசு இசைப்பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை கலெக்டர் எஸ்.பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 24 May 2018 4:00 AM IST (Updated: 24 May 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

அரசு இசைப்பயிற்சி பள்ளியில் வருகிற 1-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் ஈரோடு மாவட்ட அரசு இசைப்பயிற்சி பள்ளியில் 2018-2019-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை வருகிற 1-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.

இங்கு குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் என 7 பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 12 வயது முதல் 25 வயது வரை உள்ள இருபாலரும் பயிற்சி பெறலாம்.

குரலிசை, பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய பாடங்களுக்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாதசுரம், தவில், தேவாரம் ஆகிய பாடங்களுக்கு தமிழ் எழுதப்படிக்க தெரிந்தால் மட்டும் போதுமானது. ஆண்டுக்கு ரூ.150 பயிற்சி கட்டணம் செலுத்த வேண்டும். மாதந்தோறும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகையாக ரூ.400 வழங்கப்படும்.

அனைத்து மாணவர்களுக்கும் இலவச சீருடை, 16 மற்றும் 17 வயதுள்ள மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படும். அரசு பஸ்களில் பள்ளி வேலை நாட்களுக்கு இலவச பயண சலுகை பெறலாம். 3 ஆண்டு கால சான்றிதழ் படிப்பாகும்.

தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். வெளியூர் மாணவர்களுக்கு அரசினர் விடுதியில் தங்கி படிக்க வழிவகை செய்து கொடுக்கப்படும். இசைப்பயிற்சி பள்ளியில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள், ஈரோடு பவானி ரோடு பி.பி.அக்ரஹாரத்தில் உள்ள அரசு இசைப்பயிற்சி பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்து உள்ளார்.

Next Story