எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு: 96.15 சதவீத மாணவ–மாணவிகள் தேர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நெல்லை மாவட்டத்தில் 96.15 சதவீத மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
நெல்லை,
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நெல்லை மாவட்டத்தில் 96.15 சதவீத மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுநெல்லை மாவட்ட எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பாலா நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:–
96.15 சதவீதம் தேர்ச்சிநெல்லை மாவட்டத்தில் நெல்லை, சேரன்மாதேவி, தென்காசி ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த 3 கல்வி மாவட்டங்களிலும் 164 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்தது. 482 பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 252 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 21 ஆயிரத்து 401 பேர் மாணவர்கள், 21 ஆயிரத்து 851 பேர் மாணவிகள் ஆவார்.
இவர்களில் 41 ஆயிரத்து 585 மாணவ–மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் 20 ஆயிரத்து 189 மாணவர்களும், 21 ஆயிரத்து 396 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். இது 96.15 சதவீத தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 96.35 ஆகும். அப்போது மாநில அளவில் நெல்லை மாவட்டம் 12–வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு ஒரு இடம் முன்னேறி 11–வது இடத்தை பிடித்து உள்ளது.
100 சதவீத தேர்ச்சிமொத்தம் 260 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் 52 அரசு பள்ளிக்கூடங்கள் ஆகும். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 0.20 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் நாராயணன், அழகுராஜா, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரபாபு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.