ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்த வடமாநில தொழிலாளர்கள் நேற்று நெல்லை வழியாக ரெயில்களில் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர்.
நெல்லை,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்த வடமாநில தொழிலாளர்கள் நேற்று நெல்லை வழியாக ரெயில்களில் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர்.
ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அந்த பகுதி கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் தூத்துக்குடியில் நடந்த பேரணியில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்து தூத்துக்குடி, நெல்லை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் நாளுக்கு நாள் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் அந்த ஆலையில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் 3 லாரிகளில் மூட்டை முடிச்சுகளுடன் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் வந்தனர்.
அப்போது அந்த தொழிலாளர்கள் கூறியதாவது:-
வடமாநில தொழிலாளர்கள்
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகளுக்கான வந்து இருந்தோம். மொத்தம் 400 பேர் வேலைக்காக வந்தோம். ஒரு நாளைக்கு ரூ.350 சம்பளம் கொடுத்தனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தோம். அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு தங்கி வேலை செய்தோம்.
ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது அந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அதனால் சில நாட்கள் வேலை இல்லாமல் இருந்தோம். நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சூட்டில் 12பேர் இறந்தனர்.
சொந்த ஊருக்கு திரும்புகிறோம்
போராட்டம் தீவிரமடைந்து வருவதால் எங்களுக்கு இனி வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டோம். அதனால் சொந்த ஊருக்கு திரும்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் அந்த தொழிலாளர்கள் நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஏறி சென்னை புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து ரெயில்களில் தங்களது ஊருக்கு அவர்கள் திரும்புகின்றனர்.