தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்


தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்
x
தினத்தந்தி 23 May 2018 11:15 PM GMT (Updated: 2018-05-24T02:20:08+05:30)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டை கண்டித்து திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களில் நேற்று ஒருவர் இறந்தார். மேலும் நேற்று நடந்த சம்பவத்தில் போலீசார் மீண்டும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் இறந்ததையடுத்து சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் நடவடிக்கைக்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல் செய்யப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு திருவண்ணாமலை கிழக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பகல் 11 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் சாலை மறியல் செய்வதற்காக வந்தனர்.

போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால் போலீசாரை தள்ளிவிட்டு அவர்கள் பஸ் நிலையத்தை நோக்கி சென்றனர். போலீசார் அவர்களை மீண்டும் தடுக்க முயன்றும் முடியவில்லை. ஊர்வலமாக சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பஸ் நிலையம் முன்பு வந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்றும், இதனை வலியுறுத்தி போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இந்த சாலைமறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் 30 பேரை கைது செய்தனர். மேலும் போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தினர். இந்த மறியல் சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே சிக்னல் பகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் முத்தையன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் வீரபத்திரன், திருஞானசம்பந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்ணாசிலை அருகே பசுமை வழிச்சாலை எதிர்ப்பு இயக்கக கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் அபிராமன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story