மாநில தலைவர் பதவி வழங்க காங்கிரஸ் மேலிடம் முடிவு துணை முதல்–மந்திரி பதவி கிடைக்காததால் டி.கே.சிவக்குமார் அதிருப்தி


மாநில தலைவர் பதவி வழங்க காங்கிரஸ் மேலிடம் முடிவு துணை முதல்–மந்திரி பதவி கிடைக்காததால் டி.கே.சிவக்குமார் அதிருப்தி
x
தினத்தந்தி 24 May 2018 3:45 AM IST (Updated: 24 May 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

துணை முதல்–மந்திரி பதவி கிடைக்காததால், டி.கே.சிவக்குமார் அதிருப்தி அடைந்துள்ளார்.

பெங்களூரு, 

துணை முதல்–மந்திரி பதவி கிடைக்காததால், டி.கே.சிவக்குமார் அதிருப்தி அடைந்துள்ளார். அவருக்கு மாநில தலைவர் பதவியை வழங்க காங்கிரஸ் மேலிடம் முன்வந்துள்ளது.

காங்கிரஸ் மேலிடம் பாராட்டியது

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. அந்த கட்சிக்கு ஆட்சி அமைக்க கவர்னர் முதல் வாய்ப்பை வழங்கினார். எடியூரப்பா முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். ஐதராபாத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு டி.கே.சிவக்குமாரிடம் காங்கிரஸ் மேலிடம் வழங்கியது. எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவாமல் பாதுகாக்கும் பணியை டி.கே.சிவக்குமார் வெற்றிகரமாக செய்தார். அவருடைய இந்த பணியை காங்கிரஸ் மேலிடம் பாராட்டியது.

மாநில தலைவர் பதவி

தனக்கு துணை முதல்–மந்திரி பதவியை வழங்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் கேட்டார். சாதி அடிப்படையில் அவருக்கு அந்த பதவி வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்த குமாரசாமி முதல்–மந்திரி ஆகி இருக்கிறார். அதே சமூகத்தை சேர்ந்த டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்–மந்திரியை வழங்க காங்கிரசாரை சேர்ந்த மற்ற சமூகங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

அதனால் தலித் சமூகத்தை சேர்ந்த பரமேஸ்வருக்கு துணை முதல்–மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. இன்னொரு துணை முதல்–மந்திரி காங்கிரசுக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது லிங்காயத் சமூகத்திற்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து துணை முதல்–மந்திரி பதவிக்கு பதிலாக கட்சியின் மாநில தலைவர் பதவியை வழங்குவதாக காங்கிரஸ் மேலிடம் கூறி இருக்கிறது.

அதிருப்தி இல்லை

ஆனால் அந்த பதவியில் டி.கே.சிவக்குமார் ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. துணை முதல்–மந்திரி பதவி கிடைக்காது என்பதால், டி.கே.சிவக்குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

எனக்கு துணை முதல்–மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தி எதுவும் ஏற்படவில்லை. பரமேஸ்வர் 8 ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருக்கிறார். தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று பலமுறை அவர் கூறினார். ஆனால் ராஜினாமா செய்யவில்லை. அவர் பதவியை ராஜினாமா செய்தவுடன் அந்த பதவிக்கு பலர் காத்திருக்கிறார்கள். நான் அவ்வாறு பதவிக்காக காத்து கொண்டிருக்கவில்லை. அத்தகைய நபரும் நான் இல்லை. நான் அரசியல் செய்வதற்காக வந்துள்ளேன். நான் கட்சியின் விசுவாசமிக்க தொண்டன். கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்பேன்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story