ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற என்.எல்.சி. நிர்வாகத்திற்கு எழுத்து பூர்வமான உத்தரவு: உதவி தொழிலாளர் ஆணையர் நடவடிக்கை
ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என என்.எல்.சி. நிர்வாகத்திற்கு உதவி தொழிலாளர் ஆணையர் எழுத்துபூர்வமாக உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு என்.எல்.சி. நிர்வாகம் மாதத்தில் 26 நாட்கள் பணி வழங்கி வந்தது. அதன் பின்னர் திடீரென 20 நாட்களாக குறைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று காலை புதுவை ரெட்டியார்பாளையத்தில் உள்ள மத்திய உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. பேச்சுவார்த்தைக்கு உதவி தொழிலாளர் ஆணையர் கணேசன் தலைமை தாங்கினார். ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சிறப்பு செயலாளர் சேகர், தலைவர் அந்தோணி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆனால் என்.எல்.சி. நிர்வாகம் தரப்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.
இதற்கிடையே உதவி தொழிலாளர் ஆணையருக்கு, என்.எல்.சி. நிர்வாகம் தரப்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. அதில், தொழிலாளர்கள் பணியாற்றிய யூனிட்டுகளை மூடிவிட்டோம். அதற்கு பதிலாக சுரங்கம் 1,2-ல் வேலை தருகிறோம் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் அந்த கடிதத்தில் 26 நாட்கள் வேலை என்பதற்கு உத்தரவாதம் எதுவும் கொடுக்கப்படவில்லை. இதனை பார்த்த உடன் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் 26 நாட்கள் வேலையுடன் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சலுகைகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து உதவி தொழிலாளர் ஆணையர் கணேசன், தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு என்.எல்.சி. நிர்வாகம் உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்று எழுத்து பூர்வமாக உத்தரவிட்டார். அந்த உத்தரவை என்.எல்.சி. நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தார். அதற்கான நகலை ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட அவர்கள் கடலூர் கலெக்டரை சந்தித்து உதவி தொழிலாளர் ஆணையரின் உத்தரவை என்.எல்.சி. நிர்வாகம் நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story