‘நிபா’ வைரஸ் பாதிப்பு எதிரொலி: அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் தயார்


‘நிபா’ வைரஸ் பாதிப்பு எதிரொலி: அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் தயார்
x
தினத்தந்தி 24 May 2018 4:30 AM IST (Updated: 24 May 2018 3:47 AM IST)
t-max-icont-min-icon

‘நிபா’ வைரஸ் பாதிப்பு எதிரொலி காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் காய்ச்சல் கண்டறியும் குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.

திருப்பூர்,

‘நிபா’ வைரஸ் பாதிப்பால் கேரள மாநிலத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டிருந்தால் சிகிச்சை அளிக்க வசதியாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 படுக்கைகளுடன் இந்த வார்டு தயார் நிலையில் உள்ளது. இந்த வார்டில் ஒரு குழந்தை டாக்டர் உள்பட 2 டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர சின்னாறு சோதனை சாவடியில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு கேரளாவுக்கு சென்று வருபவர்களை பரிசோதனை செய்து வருகிறார்கள். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சவுந்தரராஜன் கூறும்போது, மாவட்டத்தில் உள்ள 10 அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் ஒதுக்கப்பட்டு 2 டாக்டர்கள் தலைமையில் மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்கிறது. இதுவரை ‘நிபா’ வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கண்டறியப்படவில்லை என்றார்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி கூறும்போது, “கிராமங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு குழுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி உள்ளோம். காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படியும், ரத்த மாதிரியை சேகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை ‘நிபா’ வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை. மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்” என்றார்.

Next Story