பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது: தூத்துக்குடியில் பதற்றம் நீடிப்பு போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு; மதுக்கடைக்கு தீ வைப்பு


பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது: தூத்துக்குடியில் பதற்றம் நீடிப்பு போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு; மதுக்கடைக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 24 May 2018 9:30 PM GMT (Updated: 24 May 2018 7:21 PM GMT)

தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. இதனால் போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மதுக்கடைக்கு தீவைக்கப்பட்டது.

துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் கடந்த 22–ந் தேதி தடையை மீறி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் கலவரம் வெடித்ததால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்த வாகனங்கள், அலுவலக கண்ணாடிகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினார்கள். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேரும், திரேஸ்புரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பெண்ணும் பலியானார்கள். பலர் காயம் அடைந்து அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்றுமுன்தினம் அண்ணாநகரில் நடந்த கலவரத்தில் போலீசார் ரப்பர் குண்டுகள் மூலம் சுட்டதால் காளியப்பன் (வயது 22) என்பவர் பலியானார். இதற்கிடையே, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் (50) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

தடியடியில் காயமடைந்தவர் சாவு

மேலும், தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் போலீசார் தடியடி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். தடியடியில் காயம் அடைந்த 65 பேரும், போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் காயம் அடைந்த 37 போலீசாருக்கும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த 22–ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போலீசாரின் தடியடியில் காயமடைந்த சாயர்புரம் அருகே உள்ள பேய்க்குளம் இருவப்பபுரத்தைச் சேர்ந்த பலவேசம் மகன் செல்வசேகர் (42) தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது.

போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் போலீஸ் நிலையம் அருகே நேற்று அதிகாலையில் 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் திடீரென்று போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினார்கள். அந்த குண்டு போலீஸ் நிலைய வளாகத்தில் பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்தில் விழுந்து வெடித்து தீப்பிடித்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின.

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி முன்பு உள்ள அரசு பஸ் டெப்போ பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அங்கு ஒரு பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனர். ஆனால், அந்த பெட்ரோல் குண்டு யார் மீதும் விழாமல் கீழே விழுந்து வெடித்தது. இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை.

மதுக்கடைக்கு தீவைப்பு

பிரையண்ட் நகர் 2–வது தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மர்ம கும்பல் தீ வைத்தது. இதில் அங்கிருந்த மதுபானங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்து, அங்கு இருந்தவர்களை அப்புறப்படுத்தினார்கள். மேலும் தூத்துக்குடி வட்டக்கோவில், 2–ம் கேட் ஆகிய பகுதிகளில் இருந்த 2 டாஸ்மாக் கடைகளையும் மர்ம கும்பல் அடித்து சூறையாடினார்கள்.

அண்ணா நகர் 5–வது தெரு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் அங்கு நின்ற ஒரு வேன், 2 மோட்டார் சைக்கிள்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள்.

தூத்துக்குடி ரங்கநாதபுரம் கீழரதவீதி தெப்பக்குளம் தெரு, டி.ஆர்.நாயுடு தெரு உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 17 கார்களின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

கமாண்டோ படை வருகை

இந்த சம்பவங்களால் தூத்துக்குடி பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையில் 8 ஐ.ஜி.க்கள், 4 டி.ஐ.ஜி.கள் உள்பட 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் கூடுதலாக வெளி மாவட்டங்களில் இருந்து 1,000 போலீசார் மற்றும் கமாண்டோ படையினர் தூத்துக்குடிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடியில் உள்ள அனைத்து சாலைகளையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜர்

கடந்த 2 நாட்களாக நடந்த கலவரத்தில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 132 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 65 பேர் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று போலீசார் ஆஜர்படுத்தினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த அவர்களின் உறவினர்கள் கோர்ட்டு வளாகத்தில் திரண்டு இருந்தனர். இந்த வழக்கில் தொடர்பு இல்லாதவர்களை எல்லாம் கைது செய்து அழைத்து செல்கிறீர்களே என்று கூறிய அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தூத்துக்குடியில் நேற்று 3–வது நாளாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடியில் இருந்து எந்த பஸ்களும் வெளியூர்களுக்கு இயக்கப்படவில்லை. இதனால் தூத்துக்குடி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடியில் நீடிக்கப்பட்ட 144 தடை உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியுடன் முடிகிறது. எனவே, மீண்டும் போராட்டங்கள் வெடிக்காமல் இருக்க போலீசாரும், அரசு அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story