மு.க.ஸ்டாலின் கைதை கணடித்து திருச்செந்தூர், உடன்குடியில் தி.மு.க.வினர் சாலைமறியல் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட 83 பேர் கைது
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்செந்தூர், உடன்குடியில் தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர்,
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்செந்தூர், உடன்குடியில் தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்பட 83 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர்தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து, சென்னையில் தலைமை செயலகத்தில் தர்ணா போராட்டம் நடத்திய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் திருச்செந்தூரில் தி.மு.க.வினர் நேற்று ஊர்வலம் மற்றும் சாலை மறியல் நடத்தினர்.
அவர்கள் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பிருந்து தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு, திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு வந்தனர். பின்னர் அவர்கள், அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
58 பேர் கைதுமாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் வெற்றிவேல், மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ, வக்கீல் அணி அமைப்பாளர் ஜெபராஜ், விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கர், நகர செயலாளர்கள் மந்திரமூர்த்தி, ராஜசேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலைமறியலில் ஈடுபட்ட அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மற்றும் 3 பெண்கள் உள்பட 58 பேரை திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரகுராஜன் (தாலுகா), ஷீஜாராணி (கோவில்) மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடன்குடிஇதேபோன்று உடன்குடி மெயின் பஜார் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் தி.மு.க.வினர் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் பாலசிங், நகர செயலாளர் ஜான் பாஸ்கர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவிராஜா, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி வசீகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலைமறியலில் ஈடுபட்ட 25 பேரை குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.