தஞ்சை மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது


தஞ்சை மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது
x
தினத்தந்தி 24 May 2018 10:45 PM GMT (Updated: 24 May 2018 8:08 PM GMT)

சென்னையில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

கும்பகோணம்,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தின் 100-வது நாளான கடந்த 22-ந் தேதி போராட்டக்காரர்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிட முயன்றபோது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் சென்னை தலைமை செயலகத்தில் தர்ணாவில் ஈடுபட முயன்ற தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாபநாசத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் கோவி.அய்யாராசு தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், பாபநாசம் ஒன்றிய தலைவர் யூசுப்அலி, ஒன்றிய பொருளாளர் கணேசன், பேரூர் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதைப்போல திருவிடைமருதூர் கடைவீதியில் நேற்று மதியம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் செ.ராமலிங்கம் தலைமையில் திரளான தி.மு.க.வினர் கலைஞர் பாசறையில் இருந்து தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். இதில் கோவி.செழியன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள்

மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்தும், தமிழக முதல்- அமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி திருவிடைமருதூர் கடைவீதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட கோவி.செழியன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணத்தில் தி.மு.க. நகர அலுவலகத்திலிருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு கும்பகோணம் பழைய மீன்மார்க்கெட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் அன்பழகன் எம்.எல்.ஏ., தி.மு.க. நகர செயலாளர் சுப.தமிழழகன், ஒன்றிய செயலாளர்கள் தி.கணேசன், ஆர்.அசோக்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் அ.ராசாராமன், ஆர்.கே.பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட அன்பழகன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 80 பேரை போலீசார் கைது செய்தனர். மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து பட்டுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் கா.அண்ணாதுரை, முன்னாள் எம்.எல்.ஏ. ஏனாதிபாலு, மதுக்கூர் ஒன்றிய செயலாளர் இளங்கோ, பட்டுக்கோட்டை நகர பொறுப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story