தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாது விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதில் இருந்து பின்வாங்கமாட்டேன் குமாரசாமி உறுதி


தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாது விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதில் இருந்து பின்வாங்கமாட்டேன் குமாரசாமி உறுதி
x
தினத்தந்தி 26 May 2018 10:00 PM GMT (Updated: 26 May 2018 8:23 PM GMT)

தனிப்பட்ட முறையில் என்னால் முடிவு எடுக்க முடியாது என்றாலும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று முதல்–மந்திரி குமாரசாமி உறுதிபட கூறினார்.

பெங்களூரு, 

தனிப்பட்ட முறையில் என்னால் முடிவு எடுக்க முடியாது என்றாலும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று முதல்–மந்திரி குமாரசாமி உறுதிபட கூறினார்.

பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள தனது வீட்டில் முதல்–மந்திரி குமாரசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பின்வாங்கமாட்டேன்

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் மாநிலத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடத்த போவதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளேன். ஜனதாதளம்(எஸ்) கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருந்தால், நான் முதல்–மந்திரியான 24 மணிநேரத்தில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்திருப்பேன்.

தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து முதல்–மந்திரியாகி உள்ளேன். இதனால் தனிப்பட்ட முறையில் நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசித்து, அவர்களது கருத்துகளையும் கேட்க வேண்டியது அவசியம். அதனால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசித்து வருகிறேன். நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யும் முடிவில் இருந்து ஒரு போதும் பின்வாங்கமாட்டேன்.

பதவி மீது ஆசை கிடையாது

இந்த சந்தர்ப்பத்தில் விவசாயிகளிடம் ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன். கடன் பிரச்சினையால் எந்தவொரு விவசாயியும் தற்கொலை செய்யக்கூடாது. அந்த முடிவுக்கு மட்டும் வராதீர்கள். எனக்கு முதல்–மந்திரி பதவி மீது ஆசை கிடையாது. அதிகாரத்திற்காக நான் முதல்–மந்திரி ஆகவில்லை. விவசாயிகள், ஏழை, எளிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும், அவர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவும் தான் முதல்–மந்திரி ஆகியுள்ளேன். மாநில மக்களுக்கு சேவை செய்யவே முதல்–மந்திரி பதவிக்கு வந்துள்ளேன்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்து, 5–வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரதமர் தவறிவிட்டார். 4 ஆண்டுகளாக பேச்சு மட்டுமே இருந்துள்ளது. பல்வேறு திட்டங்கள் கொண்டு வருவதாக கூறினாலும், எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story