இளம்பெண் கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டல் தனியார் தங்கும் விடுதி பெண் மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு


இளம்பெண் கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டல் தனியார் தங்கும் விடுதி பெண் மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 26 May 2018 9:00 PM GMT (Updated: 26 May 2018 8:46 PM GMT)

பெங்களூருவில், இளம்பெண்ணை கற்பழித்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்ததாக தனியார் தங்கும் விடுதி பெண் மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு, 

பெங்களூருவில், இளம்பெண்ணை கற்பழித்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்ததாக தனியார் தங்கும் விடுதி பெண் மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தங்கும் விடுதியில் இளம்பெண்

பெங்களூரு தீபாஞ்சலி நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் 24 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் தங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணின் அறைக்குள் நுழைந்த விடுதி மேலாளர் மஞ்சுளா, இளம்பெண்ணுக்கு சொந்தமான ஆடைகள், நகைகள் உள்பட அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டார்.

அந்த பொருட்களை இளம்பெண் திரும்ப கேட்டபோது மஞ்சுளா கொடுக்கவில்லை. மாறாக, தான் கூறும் நபர்களுடன் படுக்கையை பகிர வேண்டும், அப்போது தான் பொருட்களை கொடுப்பேன் என்று மஞ்சுளா கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண், மஞ்சுளாவை திட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் பிரச்சினை உண்டானது.

இளம்பெண் கற்பழிப்பு

சம்பவத்தன்று, இரவு இளம்பெண் தங்கியிருந்த அறையின் அழைப்பு மணி ஒலித்தது. இதையடுத்து இளம்பெண் கதவை திறந்தார். அப்போது, கார்த்திக் என்பவர் தனது நண்பர்கள் 2 பேருடன் இளம்பெண்ணின் அறைக்குள் நுழைந்தார். பின்னர், அவர்கள் இளம்பெண்ணின் முகத்தில் மயக்கமருந்து தெளிக்கப்பட்டு இருந்த துணியை வைத்து அமுக்கியுள்ளனர். இதனால், இளம்பெண் மயங்கினார். இந்த வேளையில், கார்த்திக் உள்பட 3 பேரும் இளம்பெண்ணை கற்பழித்ததாக கூறப்படுகிறது.

மேலும், அவர்கள் கற்பழிப்பு சம்பவத்தை செல்போனில் வீடியோவாகவும் எடுத்துள்ளனர். மயக்கம் தெளிந்தபோது தனது கற்பு சூறையாடப்பட்டதை அறிந்து இளம்பெண் பேரதிர்ச்சிக்கு உள்ளானார். இதற்கிடையே, கற்பழிப்பில் ஈடுபட்ட மர்மநபர்கள் இளம்பெண்ணின் செல்போனுக்கு கற்பழிப்பு சம்பவ வீடியோவை அனுப்பியதோடு, மேலும் தங்களுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும். இல்லாவிட்டால் கற்பழிப்பு வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த மிரட்டலுக்கு விடுதியின் மேலாளர் மஞ்சுளா உடந்தையாக இருந்துள்ளார்.

வழக்குப்பதிவு

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் பேடராயனபுரா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் விடுதி மேலாளர் மஞ்சுளாவை அழைத்து கண்டித்ததோடு, அவர்களிடம் இருந்த இளம்பெண் சம்பந்தப்பட்ட வீடியோவை போலீசார் அழித்துவிட்டு அனுப்பி விட்டனர்.

இந்த நிலையில், நேற்று பாதிக்கப்பட்ட இளம்பெண் சம்பவம் குறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுனில் குமாரிடம் புகார் மனு அளித்தார். கற்பழிப்பு சம்பவத்தில் தொடர்பு கொண்ட விடுதி மேலாளர் மஞ்சுளா உள்பட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகாரை வாங்கி கைது நடவடிக்கையில் ஈடுபடாத பேடராயனபுரா போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து கமி‌ஷனர் சுனில் குமார் உத்தரவின்பேரில் கற்பழிப்பு சம்பவம் குறித்து பேடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும், புகார் மீது சரியாக நடவடிக்கை எடுக்காத போலீசார் பற்றி விசாரணை நடத்தவும் கமி‌ஷனர் சுனில் குமார் உத்தரவிட்டுள்ளார்.


Next Story