ஈரோடு மாவட்டத்தில் 3 அரசு பஸ்களின் கண்ணாடி உடைப்பு


ஈரோடு மாவட்டத்தில் 3 அரசு பஸ்களின் கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 27 May 2018 10:25 PM GMT (Updated: 27 May 2018 10:25 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 3 அரசு பஸ்களின் கண்ணாடியை உடைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் இருந்து சித்தோடு, சூளை வழியாக ஈரோடு பஸ் நிலையம் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று நேற்று மதியம் வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ் வீரப்பன்சத்திரம் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அருகில் வந்தபோது அங்கிருந்த மர்மநபர்கள் பஸ்சின் முன்பகுதியில் கல்வீசி தாக்கினார்கள். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. கல்வீசி தாக்கிய மர்மநபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்தனபாண்டியன், ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்பின்னர் பஸ், போக்குவரத்துக்கழக பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி, மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

இதேபோல் மேட்டூரில் இருந்து பவானி, ஈரோடு வழியாக கோவைக்கு செல்லும் அரசு பஸ் ஒன்று ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பவானிரோட்டில் நேற்று மதியம் வந்துகொண்டு இருந்தது. அப்போது பஸ்சின் முன்பகுதியில் மர்மநபர்கள் கல்வீசி தாக்கினார்கள். இதில் அந்த பஸ்சின் முன் கண்ணாடி நொறுங்கியது.

இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோட்டில் 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் அடுத்தடுத்து உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடந்த சம்பவத்தை கண்டித்து நடந்ததா? அல்லது வன்னியர் சங்க மாநில தலைவர் ஜெ.குருவின் மறைவையொட்டி நடந்ததா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்யூர்

இதேபோல் ஈரோட்டில் இருந்து அந்தியூருக்கு நேற்று அதிகாலை 3 மணி அளவில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் பத்மநாபன் ஓட்டினார். கண்டக்டராக செந்தில்குமார் இருந்தார். பஸ்சில் 35 பேர் பயணம் செய்தனர். இந்த பஸ் அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் மோட்டார்சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வந்தார்கள். பின்னர் அவர்கள் பஸ் மீது கல்லை வீசிவிட்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றார்கள். இதில் பஸ்சின் கண்ணாடி சிதறல்கள் உடைந்து உள்ளே விழுந்தது. இந்த சம்பவத்தில் பயணிகளுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து அந்தியூர் போலீசில் டிரைவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் மீது கல்வீசிவிட்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்ற 2 மர்மநபர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதையொட்டி அந்தியூர் பஸ் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story