மாவட்ட செய்திகள்

காட்பாடி ரெயில் நிலையத்தில் ‘ப்ரீபெய்டு’ ஆட்டோ சேவை தொடங்கியது + "||" + At Katpadi railway station Prepaid Auto Service Started

காட்பாடி ரெயில் நிலையத்தில் ‘ப்ரீபெய்டு’ ஆட்டோ சேவை தொடங்கியது

காட்பாடி ரெயில் நிலையத்தில் ‘ப்ரீபெய்டு’ ஆட்டோ சேவை தொடங்கியது
வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் காட்பாடி ரெயில் நிலையமும் ஒன்றாகும். இங்கு, தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
காட்பாடி,

 வடமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் மருத்துவம், ஆன்மிகம், சுற்றுலாவிற்காக வேலூருக்கு வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் ரெயில் நிலையத்தில் இருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு ஆட்டோவில் பயணம் செய்கின்றனர். வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ் பேச தெரியாததால் அவர்களிடம் சில ஆட்டோ டிரைவர்கள் அதிக கட்டணம் வசூல் செய்வதாக ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு புகார்கள் தொடர்ந்து வந்தன.


அதையடுத்து ‘ப்ரீபெய்டு’ ஆட்டோ சேவையை தொடங்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து ஆட்டோ சேவைக்கான அலுவலகம் மற்றும் கவுண்ட்டர் அமைக்கும் பணி ரெயில் நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பணிகள் முடிவடைந்து ‘ப்ரீபெய்டு’ ஆட்டோ சேவை நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ரெயில் நிலைய ஆட்டோ சங்க கவுரவ தலைவர் சுனில்குமார் தலைமை தாங்கினார். சங்க தலைவர் சேட்டு, செயலாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்பாடி ரெயில் நிலைய மேலாளர் மதிவாணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சேவையை தொடங்கி வைத்தார்.

இதில், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்ஸ், வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாகரன் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘ப்ரீபெய்டு ஆட்டோ சேவை மூலம் கூடுதல் கட்டணம் வசூல் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. ‘ப்ரீபெய்டு’ ஆட்டோ சேவை கவுண்ட்டரில் ரூ.3 செலுத்தி செல்ல வேண்டிய இடத்திற்கான டோக்கன் பெற்று அங்கு இறங்கியதும், அதற்கான தொகையை கொடுக்கலாம். ஆட்டோ டிரைவர்கள் கூடுதலாக கட்டணம் கேட்பதற்கு வாய்ப்பு இல்லை. அனைத்து இடங்களுக்கும் நியாயமாக கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன’ என்றனர்.