வெட்டாற்றில், ரூ.2 கோடியே 90 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்


வெட்டாற்றில், ரூ.2 கோடியே 90 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 28 May 2018 10:45 PM GMT (Updated: 28 May 2018 9:30 PM GMT)

அபிவிருத்தீஸ்வரம்-கமுகக்குடி இடையே வெட்டாற்றில், ரூ.2 கோடியே 90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் அபிவிருத்தீஸ்வரம்-கமுகக்குடி இடையே வெட்டாற்றில் புதிய பாலம் கட்ட கனிமொழி எம்.பி. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடியே 90 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்புவிழா நேற்று முன்தினம் நடந்தது.

திறப்பு விழாவுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்திரன், சேகர், பேரூராட்சி செயலாளர் பூண்டி கே.கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலு வரவேற்றார்.

விழாவில் தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு புதிய பாலத்தையும், கல்வெட்டையும் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களுக்கு பயன்படுத்துவதற்கு தான் எம்.பி.க்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அப்படி ஒதுக்கீடு செய்த நிதியில் இருந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி விருப்பப்படி புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை கட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியது.

அத்தனை தடைகளையும் மீறி பல போராட்டங்களுக்கு மத்தியில் கட்டப்பட்ட பாலத்தை கருணாநிதி தான் திறந்து வைக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம். உடல் நலக்குறைவால் அவர் வர முடியாத நேரத்தில் அவரது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் திறந்து இருக்கிறோம். கண்டிப்பாக கருணாநிதி இந்த ஊருக்கு வந்து புதிய பாலத்தின் வழியாக செல்வார்.

இவ்வாறு அவர் கூறினார். முடிவில் ஊராட்சி செயலாளர் சோமு நன்றி கூறினார். 

Next Story