திருவள்ளூர் வங்கியில் கொள்ளை: வங்கி ஊழியர் உள்பட 3 பேர் கைது


திருவள்ளூர் வங்கியில் கொள்ளை: வங்கி ஊழியர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 May 2018 12:15 AM GMT (Updated: 29 May 2018 10:12 PM GMT)

திருவள்ளூர் வங்கியில் நகைகளை கொள்ளையடித்ததாக வங்கி ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.6 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன.

திருவள்ளூர்,

திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் உள்ள 2 மாடி கட்டிடத்தில் பாங்க் ஆப் இந்தியா வங்கி இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் சூப்பர்மார்க்கெட்டும், 2-வது மாடியில் சொத்துக்கடன் வழங்கும் தனியார் நிறுவனமும் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஊழியர்கள் வங்கிக்கு வந்தனர்.

அப்போது வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவு பூட்டு உடைக்கப்படாமல் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, லாக்கரில் வைக்கப்பட்டு இருந்த வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த சுமார் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.6 கோடி ஆகும்.

ஆனால் அதே நேரத்தில் மற்றொரு நகை பாதுகாப்பு அறையில் இருந்த நகைகளும், ரூ.25 லட்சம் ரொக்கமும் கொள்ளை போகவில்லை.

சம்பவ இடத்திற்கு போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி ஆகியோர் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

வங்கி வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த 32 கிலோ தங்க நகைகள் மட்டுமே கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பணம் திருடப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இந்த கொள்ளையில் வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையில் இறங்கினார்கள்.

இதனையடுத்து வங்கி ஊழியர்கள் 8 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். மேலும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக டி.எஸ்.பி.க்கள் 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

சந்தேகத்தின்பேரில் கொள்ளை நடந்த வங்கியில் உதவியாளராக பணிபுரியும் திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டையை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 36) என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். முதலில் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பேசிய விஸ்வநாதன், பின்னர் கிடுக்கிப்பிடி விசாரணையில் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

இந்த கொள்ளை சம்பவத்துக்கு வங்கி அமைந்துள்ள கட்டிடத்தின் தரைத்தளத்தில் இயங்கும் சூப்பர்மார்க்கெட்டில் பணிபுரியும் ஊழியரும், விஸ்வநாதனின் நண்பருமான ஜெய்கணேஷ்(26) மற்றும் திருவூரை சேர்ந்த பிளம்பர் கவுதம்(29) ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் கவுதம் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.6 கோடி மதிப்பிலான தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.

கொள்ளையர்கள் சிக்கியது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவை விஸ்வநாதன் அணைத்துள்ளார். வங்கியில் உள்ள அனைத்து கதவுகள் மற்றும் லாக்கர்களை பூட்டி வங்கி மேலாளரிடம் ஒரு சாவியையும், மற்றொரு சாவியை உதவி மேலாளரிடமும் விஸ்வநாதன் கொடுப்பது வழக்கம். ஆனால் அவர் வெள்ளிக்கிழமை அன்று அனைத்து கதவு மற்றும் லாக்கர்களை பூட்டிவிட்டதாக கூறி மேலாளர் மற்றும் உதவி மேலாளரிடம் தனித்தனியாக சாவியை கொடுத்துள்ளார்.

ஆனால் அவர் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகைகள் உள்ள லாக்கரையும், கீழே உள்ள கதவையும் பூட்டாமல் சாவியை ஒப்படைத்துள்ளார். அதை பெற்றுக்கொண்ட மேலாளரும், உதவி மேலாளரும் வீட்டிற்கு சென்று விட்டனர். அவர்கள் சென்ற கால்மணி நேரம் கழித்து விஸ்வநாதன் வங்கிக்கு வந்து நகைகளை திருடி 2 பைகளில் போட்டார்.

பின்னர் அந்த பைகளை ஜெனரேட்டர் அறையில் பதுக்கி வைத்தார். மற்றொரு கைப்பையில் மீதமுள்ள நகைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். மறுநாள் சனிக்கிழமை தனது நண்பர் ஜெய்கணேஷ் மூலம் நகை பைகளை எடுத்து வர முயற்சி செய்தார். ஆனால் நகை இருந்த பையை எடுத்து வர முடியவில்லை.

அதற்கு அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் வங்கிக்குள் சென்ற விஸ்வநாதன் நகை இருந்த 2 பைகளை எடுத்துக்கொண்டு தனது நண்பரான கவுதம் என்பவரிடம் கொடுத்து அதனை பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறும், கொள்ளையடித்த நகையில் பங்கு தருவதாகவும் கூறினார். இதையடுத்து கவுதம் அந்த நகைகளை வாங்கி தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்தார்.

கண்காணிப்பு கேமராவை விஸ்வநாதன் அணைத்து விட்டு நகைகளை கொள்ளையடித்தது மற்றொரு கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டது. மேலும் கைரேகைகள் மூலமாகவும் அவர்கள் குற்றவாளிகள் என கண்டுபிடிக்கப்பட்டது. விஸ்வநாதன், வங்கியில் லாக்கரை பூட்டாமல் திரும்பியதும் மற்றொரு கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டது. இவைகளை அடிப்படையாக வைத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்கள் பதுக்கி வைத்திருந்த ரூ.6 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த வங்கியில் 7 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. அதில் 2 கேமராக்கள் இரவு நேரங்களிலும் துல்லியமாக காட்சிகளை பதிவு செய்யும் வசதி கொண்டதால் இச்சம்பவத்தில் குற்றவாளிகளை எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது. கொள்ளை நடந்த 12 மணி நேரத்தில் தனிப்படையினர் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே கொள்ளை நடந்த வங்கியின் முன்பு நேற்று 2-வது நாளாக வாடிக்கையாளர்கள் திரண்டனர். இதனால் நேற்று அந்த வங்கி திறக்கப்படவில்லை.

Next Story