ஈரோட்டில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி


ஈரோட்டில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி
x
தினத்தந்தி 29 May 2018 11:42 PM GMT (Updated: 29 May 2018 11:42 PM GMT)

ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான இறகு பந்து போட்டியில் 753 பேர் கலந்துகொண்டு விளையாடினர்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட இறகு பந்து சங்கம் சார்பில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி ஈரோட்டில் 6 நாட்கள் நடக்கிறது. இந்த போட்டியின் தொடக்க விழா ஈரோடு ஜீவானந்தம் ரோட்டில் உள்ள நீல்கிரீஸ் இறகு பந்து அகாடமியில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட இறகு பந்து சங்க இணை செயலாளர் கே.செந்தில்வேலன் தலைமை தாங்கினார். விழாவில் சங்க தலைவர் செல்லையன், செயலாளர் சுரேந்தர், பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

இந்த போட்டியில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, நெல்லை, சென்னை, வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 753 பேர் கலந்துகொண்டு விளையாடினர்.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக போட்டி நடத்தப்படுகிறது. 15 வயதுக்கு உள்பட்டவர்கள், 17 வயதுக்கு உள்பட்டவர்கள் என இருபிரிவுகளாக போட்டி நடக்கிறது. மேலும், ஒற்றையர், இரட்டையர் போட்டிகளும் நடைபெறுகிறது.

இந்த போட்டிகள் ஈரோடு நீல்கிரீஸ் இறகு பந்து அகாடமி, சுத்தானந்தன் நகர், கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள சாய் இறகு பந்து அகாடமி உள்பட 4 இடங்களில் நடக்கிறது. இந்த போட்டிகளின் நடுவர்களாக மோகன்தாஸ், தினேஷ் ஆகியோர் செயல்பட்டு வருகிறார்கள்.

Next Story