கடல் கொந்தளிப்பு காரணமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை


கடல் கொந்தளிப்பு காரணமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை
x
தினத்தந்தி 29 May 2018 11:53 PM GMT (Updated: 29 May 2018 11:53 PM GMT)

கடல் கொந்தளிப்பு காரணமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

ராமேசுவரம்

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து ராமேசுவரம் பகுதியிலும், புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியிலும் 2-வது நாளான நேற்று பலத்த சூறாவளி காற்று வீசியது. தொடர்ந்து கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. குறிப்பாக எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி இறங்கு தளத்தை தாண்டி கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக சீறி எழுந்து வருகின்றன.

பலத்த சூறாவளி காற்றும் வீசி வருவதுடன் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டு வருகிறது. எம்.ஆர்.சத்திரம்,தனுஷ்கோடி அரிச்சல்முனை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் சாலைகளை மணல் மூடியுள்ளது.

இந்தநிலையில் தனுஷ்கோடி பகுதியில் பயங்கர சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவும் நேற்று அரசு பஸ்கள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா வாகனங்களும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டதுடன், புயலால் அழிந்து போன கம்பிப்பாடு கடற்கரை பகுதியிலேயே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

கம்பிப்பாடு பகுதியை தாண்டி அரிச்சல்முனை பகுதிக்கு சாலை வழியாக வாகனங்கள் செல்லாமல் இருப்பதற்காக கடலோர போலீசாரும் தடுப்பு கம்பிகளை வைத்து சாலையை மூடியபடி தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடை கோடி பகுதியான அரிச்சல்முனை கடற்கரை பகுதியை காண முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story