வாக்குப்பதிவு எந்திரங்கள தனியார் வாகனத்தில் கொண்டு செல்ல முயன்றதால் பரபரப்பு


வாக்குப்பதிவு எந்திரங்கள தனியார் வாகனத்தில்  கொண்டு செல்ல முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 May 2018 12:08 AM GMT (Updated: 2018-05-30T05:38:27+05:30)

பால்கர் நாடாளுமன்ற ெதாகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை அதிகாரி ஒருவர் தனியார் வாகனத்தில் கொண்டு செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் தேர்தல் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தானே,

பா.ஜனதாவை சேர்ந்த பால்கர் தொகுதி எம்.பி. சிந்தாமன் வாங்கா கடந்த ஜனவரி மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து காலியான அந்த தொகுதிக்கு நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா மற்றும் சிவசேனா தனித்து போட்டியிட்டன. இதற்கிடையே பால்கர் தொகுதியில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறானதால் பரபரப்பு ஏற்பட்டது. வாக்குப்பதிவு எந்திர கோளாறில் பா.ஜனதாவுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

இந்தநிலையில் பால்கர் தொகுதி சின்சாரே வாக்குச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் அதிகாரி தீபக் கோட் என்பவர் வாக்குப்பதிவு எந்திரங்களை தனியார் காரில் கொண்டு செல்ல முயன்றார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் காரை சுற்றி வளைத்து மடக்கிப்பிடித்தனர். மேலும் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் காரில் இருந்த அதிகாரியை கைது செய்து அவரிடம் இருந்த வாக்குப்பதிவு எந்திரங்களை கைப்பற்றினர். ஏற்கனவே வாக்குப்பதிவு எந்திர கோளாறு குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில் தேர்தல் அதிகாரிகளின் தற்போதைய நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பால்கர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான பிரசாந்த் நர்நாவ்ரே, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். இதற்கிடையே தேர்தல் விதிமுறை மீறலில் ஈடுபட்ட அதிகாரி தீபக் கோட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Next Story