சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா


சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா
x
தினத்தந்தி 30 May 2018 12:18 AM GMT (Updated: 2018-05-30T05:48:58+05:30)

சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி, கரும்பு தொட்டில் ஆகியவற்றை நேர்த்திக்கடனாக எடுத்து வந்தனர்.

சோழவந்தான்

சோழவந்தானில் பிரசித்தி பெற்றது ஜெனகை மாரியம்மன் கோவிலாகும். இங்கு வைகாசி திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. அதில் தினமும் அம்மன் புறப்பாடு நடந்தது. 9-ம்நாள் திருவிழாவான நேற்று அதிகாலை பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, எடுத்து வந்தனர். மேலும் பக்தர்கள் அழகுகுத்தியும், கரும்பு தொட்டில், தொட்டில் குழந்தை, ஆயிரம் கண் பானை, 21 அக்னிசட்டி எடுத்தல், கை, கால் மற்றும் முழு உருவ பொம்மைகள் மற்றும் கால்நடை பொம்மைகளை நேர்த்திக்கடனாக எடுத்து வந்தனர். குழந்தைகள் கரும்புள்ளி செம்புளி குத்தியும் இன்னும் சிலர் மாறுவேடத்திலும், சிலர் தெய்வங்கள் வேடம் அணிந்து வந்து தங்களது வேண்டுதலை அம்மனுக்கு செலுத்தினர்.

இதையொட்டி கோவிலை சுற்றி பக்தர்கள் அன்னதானம் வழங்கினர். மாலை அம்மன் வைகையாற்றிற்கு சென்று, அங்கிருந்து பூப்பல்லக்கில் அம்மன் பவனி வந்து கோவிலை வந்தடைந்தார்.

திருவிழாவையொட்டி வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சோழவந்தான் பேரூராட்சி சார்பாக ஒருநாள் கழிப்பறை வசதியும், அறக்கட்டளை சார்பாக வைகையாற்றங் கரையோரம் குளிப்பதற்கு தண்ணீர் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. சோழவந்தான் போலீசார், சத்திய சாயி அறக்கட்டளை ஆகியோர் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவிழாவையொட்டி சோழவந்தானுக்கு திண்டுக்கல், நிலக்கோட்டை, வாடிப்பட்டி, மதுரை, திருமங்கலம் உள்பட பல்வேறு இடங்களிலிருந்து அரசு சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

Next Story