காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 30 May 2018 12:58 AM GMT (Updated: 2018-05-30T06:28:39+05:30)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம்கலெக்டர் பொன்னையா தலைமையில் நடந்தது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட தொற்றுநோய் ஏற்படாமல் தடுப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது.

அனைத்து அரசு அலுவலகங்கள், மக்கள் கூடும் பொது இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள், தொழிற்சாலைகள், வீட்டு வசதி மற்றும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பஸ் நிலையம், ரெயில் நிலையம், திரையரங்கங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கொசுக்கள் உள்ளிட்ட தொற்றுநோய் பரப்பும் கிருமிகள் உற்பத்தியாகும் இடங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

தேவையற்ற உபயோகமில்லாத தண்ணீர் தேங்க கூடிய, கொசு உற்பத்தி செய்ய கூடிய பொருட்களை அகற்ற வேண்டும். மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி போன்ற தண்ணீர் சேகரிக்க கூடிய இடங்களில் கொசு புகாமல் தடுக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தி, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், துணை இயக்குனர்கள் (சுகாதாரப் பணிகள்) செந்தில்குமார், பழனி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) எம்.ஆனந்தன் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story