தனிநபர் விசாரணை கமி‌ஷன் மீது நம்பிக்கை இல்லை: "தூத்துக்குடி கலவரத்துக்கு சமூக விரோதிகளே காரணம்" ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி


தனிநபர் விசாரணை கமி‌ஷன் மீது நம்பிக்கை இல்லை: தூத்துக்குடி கலவரத்துக்கு சமூக விரோதிகளே காரணம் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 30 May 2018 10:00 PM GMT (Updated: 2018-05-30T19:17:25+05:30)

“தூத்துக்குடி கலவரத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என்றும், தனிநபர் விசாரணை கமி‌ஷன் மீது நம்பிக்கை இல்லை“ என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

தூத்துக்குடி, 

“தூத்துக்குடி கலவரத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என்றும், தனிநபர் விசாரணை கமி‌ஷன் மீது நம்பிக்கை இல்லை“ என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

சமூகவிரோதிகளே காரணம்

தூத்துக்குடியில் உள்ள ஒரு ஓட்டலில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று மதியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்று பார்த்தேன். அதில் சில குடும்பங்கள் விடுபட்டு விட்டது. பாதிக்கப்பட்டவர்களை பார்க்கும் போது சிலர் பயந்து உள்ளனர். சிலர் பிரமை பிடித்து போல் உள்ளனர். நிறைய பேர் சோகத்தில் இருக்கிறார்கள். அவர்களின் உறவினர்களை பார்க்கும் போது மனதுக்கு ரொம்ப பாரமாக இருக்கிறது. இவர்களுக்கு நடந்தது போன்ற ஒரு சம்பவம் இனிமேல் நடக்க கூடாது.

மக்கள் 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நடந்த போராட்டத்தில் கலெக்டர் அலுவலகம், குடியிருப்பு எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சாமானிய மக்கள் கிடையாது. நிச்சயமாக வி‌ஷக்கிருமிகள், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து உள்ளனர். சமூக விரோதிகளே இந்த கலவரத்துக்கு காரணம். அவர்களின் வேலைதான் இது.

ஜெயலலிதாவுக்கு பாராட்டு

போராட்டம் செய்யும் போது, மக்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சமூக விரோதிகள் அதிகமாக உள்ளனர். ஜல்லிக்கட்டில் கூட இது போன்றுதான் நடந்தது. இந்த புனிதமான போராட்டம் கூட ரத்தக்கறையுடன் முடிந்து உள்ளது.

அரசு இரும்பு கரத்துடன் வி‌ஷக்கிருமிகளையும், சமூக விரோதிகளையும் அடக்க வேண்டும். அந்த வி‌ஷயத்தில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டுகிறேன். சமூக விரோதிகளையும், வி‌ஷக்கிருமிகளையும் இரும்பு கரத்தால் அடக்கி வைத்து இருந்தார். தற்போதைய அரசு இந்த வி‌ஷயத்தில் அவர்களை பின்பற்றி அடக்கி வைக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டுக்கே ரொம்ப ஆபத்து.

மனிதர்களே கிடையாது

ஆலை இனிமேல் திறக்கப்படாது, பூட்டு போடப்பட்டு உள்ளது என்று அரசு உத்தரவு கொடுத்து உள்ளது. அப்படி இருந்தும் ஸ்டெர்லைட் நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றால் அவர்கள் மனிதர்களே கிடையாது. கோர்ட்டில் இருப்பவர்கள்கூட மனிதர்கள் தான். நிச்சயமாக அங்கு ஜெயிக்காது. ஜெயிக்கவும் விடக்கூடாது. ஜெயிக்க விடமாட்டார்கள். மக்கள் சக்திக்கு முன்பு எந்த சக்தியும் ஒன்றும் செய்யாது.

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ளவர்கள் உண்மையான மனிதர்களாக இருந்தால், இத்தனை உயிர்பலி வாங்கியும், இத்தனை பேர் அடிபட்டு இருக்கும் நிலையில் மறுபடியும் திறக்க வேண்டும் என்ற நினைப்பு கூட வரக்கூடாது. அது நிச்சயமாக எந்த அரசு வந்தாலும் அனுமதி கொடுக்க மாட்டார்கள்.

போராட்டத்தை ஊக்குவிக்கிறார்கள்

தமிழகத்தில் அடிக்கடி போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சிலர் நல்லதுக்கு போராடுகிறார்கள். சிலர் போராட்டத்தை ஊக்குவிக்கிறார்கள். மக்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழ்நாடு போராட்ட பூமியாக இருந்தால் எந்த தொழிலும் இங்கு வராது. எந்த வியாபாரிகளும் வரமாட்டார்கள். வேலைவாய்ப்பும் கிடைக்காது. இளைஞர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். ஏற்கனவே தண்ணீர் இல்லாமல் விவசாயம் கிடையாது. வேலைவாய்ப்பும் இல்லையென்றால் மிகவும் கஷ்டமாகி விடும். போராட்டம் செய்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்.

அரசு போராட்டத்துக்கு அனுமதி அளிக்கும் போது, எல்லா விதிமுறைகளையும் பார்த்து சரியாக அனுமதி அளிக்க வேண்டும். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கோர்ட்டை அணுகி தான் தீர்வு காண வேண்டுமே தவிர, போராட்டம், போராட்டம் என்றால் மிகவும் கஷ்டம் ஆகி விடும். இதனை அரசியல்வாதிகள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

உளவுப்பிரிவின் தவறு

தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு ரஜினிகாந்த் அளித்த பதில்கள் வருமாறு:–

கேள்வி: சமூகவிரோதிகள் உள்ளே புகுந்ததை தடுக்க தவறியது காவல்துறையின் பலவீனமா?

பதில்:

இந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததை கண்காணிக்க தவறியது உளவுப்பிரிவின் தவறுதான். நடந்தது நடந்து விட்டது. இனிமேல் நடப்பது எல்லாம் நல்லதாக நடக்கட்டும்.

கேள்வி: ஆலையை மூடிய பிறகும் தி.மு.க., கூட்டணி கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள். சட்டசபையை தொடர்ந்து நடத்தவிடாமல் தடுக்கிறார்களே ஏன்?

பதில்: ஆலையை மூடிய பிறகும் தி.மு.க.வினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறார்கள். மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். மக்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் தெரியும். நேரம் வரும் போது அவர்கள் நியாயத்தை காட்டுவார்கள்.

கேள்வி: துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார்?

பதில்: துப்பாக்கி சூட்டுக்கு யார் உத்தரவிட்டது என்பது மொத்தத்தில் மிகவும் குழப்பமாக உள்ளது. இதனை போலீசார் எதிர்பார்க்கவில்லை. வன்முறை ஏற்படும் என்று நினைக்கவில்லை. அப்போதும் சொல்கிறேன், இப்போதும் சொல்கிறேன் அந்த போலீசார் மீது கை வைத்தவர்களை மட்டும் நிச்சயமாக விடக்கூடாது. அப்படியே சென்று கொண்டு இருந்தால் மக்களை காப்பாற்றுவது யார்?. 7 கோடி மக்களில் எத்தனை பேர் போலீசாக உள்ளனர். இதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வீடியோ கேமரா பதிவு உள்ளது. அனைத்தையும் முழுமையாக பார்த்து யார், யார்? போலீசாரை தாக்கி உள்ளார்கள், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தி உள்ளார்கள்? என்று அறிந்து அவர்களை பிடிக்க வேண்டும். அவர்களின் பெயர்களை பத்திரிகை, டி.வி.க்களில் வெளியிட வேண்டும். அவர்கள் சமூகவிரோதிகள் என்று பதிவு செய்ய வேண்டும்.

ராஜினாமா

கேள்வி: முதல்–அமைச்சர் ராஜிமானா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நீங்கள் ஏன் முன்வைக்கவில்லை?

பதில்: எல்லாவற்றுக்கும் முதல்–அமைச்சரை ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் எப்படி. அது அரசியல், அதனைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால் பெரிய தவறு நடந்து உள்ளது. இனிமேல் அவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் ராஜினாமா என்றால் சரியாக இருக்காது. 13 பேர் உயிர் இழந்து உள்ளனர். அதனால் ஆலைமூடப்பட்டு உள்ளது.

கேள்வி: ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் மீது நம்பிக்கை இருக்கிறதா?

பதில்: தமிழக அரசின் ஒருநபர் கமி‌ஷன் மீது நம்பிக்கை இல்லை.

கேள்வி: போராட்டத்தை கண்டு கொள்ளாததற்கு யார் காரணம்?

பதில்: மக்களின் 100 நாள் போராட்டத்தை கண்டு கொள்ளாததற்கு அரசின் அலட்சியம் தான் காரணம். இது அவர்களுக்கு பெரிய பாடம்.

கேள்வி: இறந்தவர்களின் வீடுகளுக்கு ஏன் செல்லவில்லை?

பதில்: இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் இங்கு வந்து இருக்கிறார்கள். கூட்டத்தால் அவர்களின் வீடுகளுக்கு செல்ல முடியவில்லை. அமைதியான பிறகு அங்கு சென்று அவர்களை சந்திப்பேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story