அரியலூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்; பொதுமக்கள் பாதிப்பு


அரியலூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்; பொதுமக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 30 May 2018 10:45 PM GMT (Updated: 30 May 2018 7:13 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

தாமரைக்குளம்,

வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக வங்கி ஊழியர் சங்கங்களுடன், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில் வருவாய் அடிப்படையில் ஊழியர்களுக்கு சராசரியாக 2 சதவீதம் அளவிற்கு ஊதிய உயர்வு வழங்க அரசு முன் வந்தது. ஆனால் மற்ற பல அரசு துறைகளை ஒப்பிடுகையில், தங்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் புகார் தெரிவித்தன. வேலை அடிப்படையில், சம்பளம் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமே தவிர, வருவாய் அடிப்படையில் சம்பள உயர்வு விகிதம் நிர்ணயிக்க கூடாது என வங்கி ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தின. இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு 48 மணிநேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் 30, 31-ந்தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக கூறியிருந்தனர்.

அதன்படி அரியலூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தத்தில் அரியலூர் மாவட்டத்தில் 44 அரசு வங்கிகள் மற்றும் 34 தனியார் துறை வங்கிகள் என மொத்தம் 78 வங்கிகளில் பணியாற்றும் 640 ஊழியர்கள் பங்கேற்றனர். இதனால் அனைத்து வங்கிகளும் செயல்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. வங்கி பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான பொதுமக்கள் வங்கிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

இதுகுறித்து வங்கி ஊழியர்கள் கூறுகையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, 3 மாதங்களாக வங்கி ஊழியர்கள், நாள் முழுவதும் உழைத்தோம். அரசின் உத்தரவுக்கு ஏற்ப 31 கோடி ஜன்தன் கணக்குகளை தொடங்கி, நலத்திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். ஆனால் தங்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை. 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அமல்படுத்த வேண்டிய சம்பள உயர்வு நிலுவையில் உள்ளது. அரசு தர முன் வந்துள்ள சம்பள உயர்வை ஏற்க முடியாது என கூறினார்கள்.


Next Story