சிங்கம்புணரி, எஸ்.புதூர் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம்


சிங்கம்புணரி, எஸ்.புதூர் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 30 May 2018 10:30 PM GMT (Updated: 30 May 2018 7:13 PM GMT)

சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கம்புணரி,

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி சிங்கம்புணரி பகுதியில் உள்ள கடைகளில் சுகாதார துறையினர் திடீர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். சுகாதார துறை துணை இயக்குனர் அருள்மணி தலைமையிலும், பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு முன்னிலையிலும் இந்த ஆய்வு நடைபெற்றது. சிங்கம்புணரியில் உள்ள பல்பொருள் அங்காடி கடைகளில் சோதனை அதிகாரிகள் சோதனை செய்தபோது அங்கு சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், அவர்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான, முத்திரை இல்லாத உணவுப்பொருட்கள் அழிக்கப்பட்டன. ஆய்வின்போது டாக்டர் பரணிதரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தினகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், இளநிலை உதவியாளர் செயல்தரன், துப்புரவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோன்று எஸ்.புதூரிலும் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி சுகாதார பணிகள் துணை இயக்குனர் யசோதாமணி உத்தரவின் பேரில் துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் அருள்மணி தலைமையில் சுகாதார ஆய்வாளர் கேசவராமன் உள்ளிட்டோர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் புகையிலை பொருட்கள் வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story