குருகுல கல்வி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் கி.வீரமணி பேச்சு


குருகுல கல்வி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் கி.வீரமணி பேச்சு
x
தினத்தந்தி 30 May 2018 10:45 PM GMT (Updated: 30 May 2018 7:13 PM GMT)

சமஸ்கிருத மொழியை வளர்ப்பதற்காக குருகுல கல்வி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று பட்டுக்கோட்டையில், கி.வீரமணி கூறினார்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மண்டல திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில், இளைஞர் எழுச்சி மாநாடு பட்டுக்கோட்டையில் நேற்று முன்தினம் நடந்தது. மாநாட்டுக்கு தஞ்சை மண்டல இளைஞர் அணி செயலாளர் வெற்றிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி தலைவர் சோம.நீலகண்டன் வரவேற்றார்.

மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

மத்தியில், பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து விட்டதாக மோடி கூறுகிறார். மோடிக்கு தான் வளர்ச்சியே தவிர நாட்டுக்கு அல்ல.

தேர்தல் பிரசாரத்தின்போது, ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டில் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப் படும் என மோடி கூறினார். அதை நம்பி அவரை தேர்ந் தெடுத்தார்கள். ஆனால் இந்த 4 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு கூட வேலை வாய்ப்பை வழங்கவில்லை.

நீட் தேர்வு எழுதினால் தான் மருத்துவர் ஆக முடியும் என்ற நிலை உள்ளது. 50 ஆண்டு கால திராவிடர் ஆட்சியில் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. இந்திய அரசியலில் தடை செய்யப்பட்ட ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ். தான்.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.-ஐ பலம் பொருந்திய இயக்கமாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். அது ஒரு விஷக்கிருமி. பரவ விடக்கூடாது. சமஸ்கிருத மொழியை படித்தால் உடனடி வேலை வாய்ப்பு என்கிறார்கள். சமஸ்கிருதத்தை வளர்க்க குருகுல திட்டம் வருகிறது. இது ராஜாஜி காலத்தில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வி திட்டத்தை விட ஆபத்தானது.

தமிழ்நாட்டில் 80 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். 200 என்ஜினீயரிங் கல்லூரிகள் மூடும் நிலையில் உள்ளன. நமது பிள்ளைகள் மருத்துவம் படிக்க கூடாது என்பதற்காக நீட் தேர்வை நடத்துகிறார்கள். இதை எதிர்த்து நிற்கும் இயக்கம் திராவிடர் கழகம் மட்டும் தான். நீட் தேர்வுக்கு எதிராகப் போராடவும், சமஸ்கிருத மொழியை வளர்க்க மத்திய அரசு குருகுல கல்வி திட்டத்தை கொண்டு வருவதை எதிர்த்தும் திராவிடர் கழகம் விரைவில் போராட்டம் நடத்தும். இதற்கு பெரியார் படை தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்வது. மத்திய அரசின் குருகுல கல்வி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக கி.வீரமணி, ஒரு ஜோடிக்கு சாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்தார். மாநாட்டில் திராவிடர் கழக துணைத்தவைர் பூங்குன்றன், பொதுச்செயலாளர்கள் அன்புராஜ், ஜெயக்குமார், சுயமரியாதை நிறுவன துணைத்தலைவர் தங்கராசு, பட்டுக்கோட்டை ஒன்றிய திராவிடர் கழக தலைவர் சேகர், மாவட்ட இளைஞர் அணி துணைத்தலைவர் தென்னவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டுக்கோட்டை நகர இளைஞர் அணி தலைவர் மாதவன் நன்றி கூறினார். 

Next Story