ஈரோடு மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது


ஈரோடு மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 30 May 2018 10:45 PM GMT (Updated: 2018-05-31T00:43:53+05:30)

ஈரோடு மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தினால் ரூ.800 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

ஈரோடு,

வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கான 11-வது இரு தரப்பு ஒப்பந்தத்தை விரைவில் அமைக்க வேண்டும். வங்கி ஊழியர்களுக்கு உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள், அதிகாரிகள் நேற்று பணிக்கு செல்லவில்லை. இதனால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், பல்வேறு வங்கிகளின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. வங்கி ஊழியர்களின் போராட்டத்தை அறியாத பொதுமக்கள் பணபரிவர்த்தனைக்காக வங்கிக்கு சென்றனர். அப்போது போராட்டம் காரணமாக வங்கிகள் செயல்படாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்தநிலையில் வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் ஈரோடு மாவட்ட கிளை சார்பில் ஈரோடு தலைமை ஸ்டேட் வங்கியின் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கணேஷ் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் பாக்கியகுமார், செல்வம், முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் பலர் திரளாக கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கணேஷ் கூறியதாவது:-

ஊதிய உயர்வுக்கான 10-வது இரு தரப்பு ஒப்பந்தம் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் காலாவதியானது. 11-வது இருதரப்பு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் 2 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு வங்கிகளின் நிதி நிலைதான் காரணமாக கூறப்பட்டது.

வாராக்கடன்கள் வசூல் செய்யப்படாமல் உள்ளது. வங்கிகளில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி வருவாய் உள்ளது. ஆனால் எங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாமல் தாமதப்படுத்தப்படுகிறது. எனவே 11-வது இருதரப்பு ஒப்பந்தத்தை விரைந்து அமைக்க வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 400 பெண்கள் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 200 ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 270-க்கும் மேற்பட்ட வங்கிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் ரூ.800 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கூட்டுறவு வங்கிகளும், ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., ஆக்சிஸ் உள்ளிட்ட சில தனியார் வங்கிகளும் வழக்கம்போல் செயல்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார். வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் 2-வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. 

Next Story