வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது 300 வங்கிகள் மூடப்பட்டன


வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது 300 வங்கிகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 30 May 2018 11:00 PM GMT (Updated: 30 May 2018 7:27 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. 300 வங்கிகள் மூடப்பட்டன.இதனால் ரூ.100 கோடிக்கு வர்த்தகம் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

திருச்சி,

இந்திய வங்கிகள் சங்கம் வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தாமதப்படுத்தி வருவதற்கு எதிராகவும், வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு பிரச்சினையில் மத்திய அரசின் அலட்சிய போக்கு மற்றும் 2 சதவீத ஊதிய உயர்வு மட்டுமே வழங்க முடியும் என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை கண்டித்தும் இந்தியா முழுவதும் மே 30 மற்றும் 31-ந்தேதிகளில் வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பின்படி நேற்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 1,500 வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர். இதனால் திருச்சி நகரம் மற்றும் புறநகர பகுதிகளில் உள்ள சுமார் 300 வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஐ.ஓ.பி வங்கி உள்பட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கரூர் வைஸ்யா வங்கி உள்பட மிக பழமையான தனியார் வங்கி ஊழியர்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அந்த வங்கிகளும் மூடப்பட்டன. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளிட்ட சில புதிய தலைமுறை வங்கிகள் மட்டும் செயல்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் திருச்சி ஜென்னி பிளாசா வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கி மண்டல மேலாளர் அலுவலகம் முன் நேற்று காலை கூடினார்கள். அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் 9 சங்கங்களை சேர்ந்த வங்கி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களை சேர்ந்த ராமராஜ், அசோக், ஜெகநாதன், கோபாலகிருஷ்ணன், சந்தானம், தர்ம பெருமாள், ராஜகோபால், வெங்கடரமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அப்போது அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் வங்கிகளில் பணம் எடுத்தல் மற்றும் டெபாசிட் செய்தல், காசோலை பரிவர்த்தனை போன்ற பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. வேலை நிறுத்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) இரண்டாவது நாளாக நடக் கிறது. 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தினால் திருச்சி மாவட்டத்தில் சுமார் ரூ.100 கோடி அளவிற்கு வர்த்தகம் முடங்கும், ஏ.டி.எம். எந்திரங் களில் பணம் நிரப்பும் பணியும் பாதிக்கப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 

Next Story