கர்நாடக கடலோர மாவட்டங்களில் 2-வது நாளாக மழை நீடித்தது


கர்நாடக கடலோர மாவட்டங்களில் 2-வது நாளாக மழை நீடித்தது
x
தினத்தந்தி 30 May 2018 11:15 PM GMT (Updated: 30 May 2018 7:36 PM GMT)

மழை பாதித்த பகுதியில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் குழுவினர் வந்துள்ளனர்.

மங்களூரு,

கர்நாடக கடலோர மாவட்டங்களில் நேற்று 2-வது நாளாக மழை நீடித்தது. கனமழைக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மழை பாதித்த பகுதியில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் குழுவினர் வந்துள்ளனர்.

கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் காலை தென்மேற்கு பருவமழை தொடங்கியது. காலையில் விட்டுவிட்டு பெய்த மழை மதியத்திற்கு பிறகு விசுவரூபம் எடுத்தது. குறிப்பாக மங்களூரு நகரில் உள்ள கொட்டாரசவுக்கி, குத்தார்பதவு, தொக்கோட்டு, ஹெக்கூர், பம்ப்வெல், லால்பாக், சென்டிரல் ரெயில் நிலையம் உள்பட நகரின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது. தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. பஜ்பே பகுதியில் பெய்த மழையின் போது விமான நிலைய ஓடுதளத்தில் மழைநீர் தேங்கியதால் விமானங்களை தரையிறங்குவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதனால் விமான சேவையும் நிறுத்தப்பட்டது. மேலும் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. மழை வெள்ளத்தில் சிக்கியவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

குறிப்பாக ஜல்லிகுட்டே, ஆகாஷா பவன், காவூர், உல்லால் பயில் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் வீட்டு உபயோகப் பொருட்கள் நீரில் மூழ்கி நாசமானது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார், தீயணைப்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் சென்று அந்தப் பகுதி மக்களை மீட்டு, அட்டியப்படி, பஜ்பே பகுதிகளில் உள்ள பள்ளிக் கூடங்களில் தங்கவைத்தனர்.

அதேப் போல் படில் கொட்டக்கல், கொட்டாரசவுக்கி, மன்னாகுட்டா, மல்லிகட்டா அரசு ஆஸ்பத்திரி, தொக்கொட்டு, ஒசபெட்டு, கரவளி சர்க்கிள், பம்ப்வெல், கொஞ்சடி, கோல்நட், எய்யாடி, ஜோதி பஸ் நிலையம், பள்ளபாக், சென்டிரல் ரெயில் நிலையம், சொக்கப்பெட்டு, அட்டாவர், கத்ரி உதய்நகர், பாரத் மால், குஜரால் பள்ளி ஆகிய பகுதிகளையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்தப் பகுதியில் இருந்த மக்களை போலீசார் ரப்பர் படகு மூலம் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.

மேலும் மழை நீர் தேங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதேப் போல் சாக்கடை கால்வாயை சரிவர தூர்வாரவில்லை எனவும், இதனால் தான் மழை வெள்ளம் வழிந்தோட முடியாமல் வீடுகளை சூழ்ந்ததாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் மழை பாதித்த பகுதிகளை பா.ஜனதாவை சேர்ந்த நளின்குமார் கட்டீல் எம்.பி., மங்களூரு தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வேதவியாஸ் காமத் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது பொதுமக்கள், சாக்கடை கால்வாய்களை சரிவர தூர்வாராததால் தான், மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து விட்டதாக கூறி வாக்குவாதம் செய்தனர். அவர்களை, எம்.பி.யும், எம்.எல்.ஏ.வும் சமாதானப்படுத்தினர். மேலும் சாக்கடை கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே நேற்று 2-வது நாளாக தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய மாவட்டங்களில் மழை நீடித்தது. பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். மங்களூரு அருகே தொக்கூர்-படில் பகுதிகளில் பெய்த கனமழையின் போது தண்டவாளத்தில் மண் சரிந்து விழுந்தது.

இதுபற்றி அறிந்த ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் அங்கு சென்று தண்டவாளத்தில் விழுந்த மண்ணை அகற்றினர். இதனை தொடர்ந்து ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில் மங்களூருவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 38 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு நேற்று மங்களூருவுக்கு வருகை தந்தது. மேலும் அந்த குழு உடனடியாக மீட்பு பணியிலும் ஈடுபட்டது. இந்த குழுவினர் மழைநீர் தேங்கிய பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கனமழையையொட்டி தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தன.

கனமழைக்கு தட்சிணகன்னடா மாவட்டத்தில் 2 பெண்கள், கன்னட திரைப்பட இயக்குனர், உடுப்பியில் சிறுமி ஆகிய 4 பேர் பலியாகியுள்ளனர். பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று கலெக்டர்கள் சசிகாந்த் செந்தில் (தட்சிணகன்னடா), பிரியங்கா மேரி பிரான்சிஸ் (உடுப்பி) ஆகியோர் அறிவித்துள்ளனர். தட்சிணகன்னடா மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கனமழைக்கு சேதமடைந்து உள்ளதாகவும், மேலும் துரிதமான முறையில் மீட்பு பணிகளை செய்யவும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் கலெக்டர் சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி ஊழியர்கள், பொதுப்பணித் துறை, மின்வாரியம், தீயணைப்பு படையினர், போலீசார், மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எம்.பி., எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் வாக்குவாதம்

மங்களூருவில் நேற்று முன்தினம் வெளுத்து வாங்கிய கனமழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் மண் சரிவு ஏற்பட்டதுடன் சில இடங்களில் வீடுகளும் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று காலை மங்களூரு தொகுதி எம்.பி. நளின்குமார் கட்டீல், மங்களூரு தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வேதவியாஸ் காமத் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருந்தது. அந்த சமயத்தில் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், சரியாக சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி கிடக்கிறது. மேலும் சில இடங்களில் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது எனக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை எம்.பி., எம்.எல்.ஏ. சமாதானப்படுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் நாளிலேயே கடலோர மாவட்டங்களான தட்சிணகன்னடா, உடுப்பி, கார்வார் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழைக்கு தட்சிணகன்னடா, உடுப்பி மாவட்டங்களில் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. நேற்று முன்தினம் கனமழையால் மங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் நேற்றும் மங்களூரு உள்பட மாவட்டம் முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்த படி இருந்தது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பலியான சிறுமியின் குடும்பத்துக்கு ஷோபா எம்.பி. ஆறுதல்


உடுப்பி அருகே படுபித்ரியை சேர்ந்த சிறுமி நிதி ஆச்சார்யா நேற்று முன்தினம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாள். அவளது உடல் நேற்று மீட்கப்பட்டது. இந்த நிலையில் பலியான சிறுமியின் வீட்டுக்கு சிக்கமகளூரு-உடுப்பி தொகுதி எம்.பி. ஷோபா நேற்று சென்றார். பின்னர் அவர் சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் ஷோபா எம்.பி., மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மீட்பு பணிகளை விரைந்து முடிக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

Next Story