சிறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் - குமாரசாமி அறிவிப்பு


சிறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் - குமாரசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 30 May 2018 11:30 PM GMT (Updated: 2018-05-31T01:12:13+05:30)

சிறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என குமாரசாமி அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்வது குறித்து 15 நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், சிறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும் குமாரசாமி அறிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின்போது, முதல்-மந்திரி குமாரசாமி, தான் ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்தில் விவசாய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்தார். தற்போது குமாரசாமி முதல்-மந்திரி ஆகியுள்ளார். ஆனால் இதுவரை விவசாய கடன் தள்ளுபடி செய்யவில்லை. இதை கண்டித்து பா.ஜனதா சார்பில் கடந்த 28-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், தலைமை செயலாளர் ரத்ன பிரபா, எதிர்க்கட்சி துணைத்தலைவர் கோவிந்த் கார்ஜோள் மற்றும் 150-க்கும் அதிகமான விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை 2½ மணி நேரம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விவசாயிகள் பேசுகையில், தாங்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும், அதனால் தாங்கள் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிப்படி விவசாய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-

கர்நாடகத்தில் எங்கள் கூட்டணி அரசு 5 ஆண்டுகள் உறுதியாக ஆட்சியில் இருக்கும். ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் வராது. 2 கட்சிகளும் பரஸ்பரம் நம்பிக்கையில் உள்ளோம். எனது ஆட்சி காலத்தில் விவசாயிகள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தாமல் இருக்கும் வகையில் திட்டங்களை தீட்டி அமல்படுத்துவேன். எனக்கு விவசாயிகளின் ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் தேவை.

நாம் அனைவரும் சேர்ந்து கர்நாடகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். இது என் ஒருவனால் மட்டும் சாத்தியம் இல்லை. கர்நாடகத்தில் வங்கிகளில் ரூ.1.14 லட்சம் கோடி விவசாய கடன் உள்ளது. இதில் விவசாய தொழில் பெயரில் தொழில் அதிபர்கள், மக்கள் பிரதிநிதிகளின் வாங்கிய கடனும் அடங்கும். 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக வருமான வரி செலுத்திய ஆலோசித்து அவருடைய ஒப்புதலையும் பெறுவேன்.

விவசாய கடன் தள்ளுபடிக்கு மாவட்ட கலெக்டர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுவார்கள். விவசாயிகள் தங்களின் வங்கி கடன் குறித்த விவரங்களை அவர்களிடம் வழங்க வேண்டும். தேசிய வங்கி அதிகாரிகளுடன் இன்னும் 2 நாட்களில் ஆலோசனை நடத்துவேன். அந்த வங்கிகளில் உள்ள கடனை தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பேன்.

விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. கடந்த 4 நாட்களில் 10 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். நிதிநிலை மற்றும் விவசாய கடன் குறித்து அறிக்கை வழங்குமாறு தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டு உள்ளேன். நான் விவசாய கடனை தள்ளுபடி செய்யமாட்டேன் என்று சிலர் தவறான தகவலை வெளியிட்டு வருகிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம்.

விவசாயிகளை காப்பதுடன் அரசு கஜானாவையும் பத்திரமாக பாதுகாப்பேன். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். விவசாய கடன் தள்ளுபடி முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை. கூட்டணி ஆட்சி நடப்பதால் எனக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதன்படி நடந்துகொள்ள வேண்டியதுள்ளது.

விவசாயிகளிடம் தன்னம்பிக்கையை அதிகரிக்க தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும். மாநில மக்களின் நலனுக்கு எதிரான எந்த திட்டத்தையும் நான் அமல்படுத்த மாட்டேன். நகர வளர்ச்சியும், கிராம வளர்ச்சியும் எங்களுக்கு முக்கியம். நகர வளர்ச்சியை நாங்கள் புறக்கணிக்க மாட்டோம். விவசாயிகளின் நலனை காக்க நாங்கள் எப்போதும் தயார். விவசாய கடனை எந்த மாதிரியில் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது குறித்து ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி அதனை அறிவிப்போம். ஆற்றுநீரை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு சென்று வினியோகம் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. இதற்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதி தேவை. இவ்வாறு குமாரசாமி கூறினார்.

இதைதொடர்ந்து துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேசுகையில், “விவசாய கடன் தள்ளுபடிக்கு காங்கிரசின் ஆதரவு உண்டா? இல்லையா? என்ற குழப்பம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. யாருக்கும் சந்தேகம் வேண்டாம். விவசாய கடன் திட்டத்திற்கு காங்கிரசின் முழு ஆதரவு உண்டு. எந்த அடிப்படையில் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், எந்த நிலையில் உள்ள விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

கர்நாடக அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்த பிறகு விவசாய கடன் தள்ளுபடி குறித்து முடிவு எடுக்கும். அதுவரை விவசாயிகள் பொறுமையாக இருக்க வேண்டும். நல்லாட்சியை வழங்க நாங்கள் கூட்டணி அமைத்து இருக்கிறோம். உங்களின் ஆலோசனைகள் எங்களுக்கு அவசியம் வேண்டும்“ என்றார்.

Next Story